full screen background image
Search
Friday 3 May 2024
  • :
  • :
Latest Update

புரியாத மொழியில் எழுதுகிறேன் என்றார்கள் : கவிஞர் வைரமுத்து

தமிழ் திரைப்படத் துறை சார்பில் தேசிய விருதுகள் பெற்றுள்ள கவிஞர் வைரமுத்து, டைரக்டர் ராஜூமுருகன், பின்னணி பாடகர் சுந்தரய்யர், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தனஞ்செயன் உள்ளிட்டோருக்கு சென்னை வடபழனியில் நேற்று பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசியதாவது:–

நாங்கள் பெற்றுள்ள தேசிய விருதுகளைத் தமிழர்களுக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறோம். விருது என்பது திறமையின் அளவுகோல் அல்ல. எங்களைவிட அறிவாளிகள், மேதைகள், விற்பன்னர்கள் நிறையபேர் இந்த சினிமா துறையில் இருந்து இருக்கிறார்கள். அவர்கள் பெறாத விருதுகளை விளம்பர வெளிச்சம் எங்களுக்கு பெற்று தந்து இருக்கிறது.

நான் 7 விருதுகள் பெற்றுவிட்டேன். என்னைப் பார்த்து உங்களுக்கு எதற்கு இத்தனை விருதுகள் என்று கேட்கிறார்கள். அவர்கள் கொடுக்கிறார்கள். நான் வாங்கிக்கொள்கிறேன். தமிழர்கள் தாக்கப்படுவதும், ஒதுக்கப்படுவதுமாக இருக்கிற இன்றைய சூழ்நிலையில், இப்படி ஐந்தாறு தேசிய விருதுகளை தமிழர்கள் பெற்றார்கள் என்பது நேர்மறை சிந்தனை.

தேசிய விருதுக்கு வந்த 434 படங்களை வடிகட்டி, 86 படங்களாக குறைத்து அதில் இருந்து விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து உள்ளனர். நான் கிராமத்தில் இருந்து வந்துதான் பாட்டு எழுதத் தொடங்கினேன்.

ஆரம்பத்தில் எனது பாடல் வரிகள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடலைப்போல் எளிமையாக இல்லை என்றும், எம்.ஏ. படித்து இருப்பதால் புரியாத மொழியில் எழுதுகிறேன் என்றும் பேசினார்கள். இதனால் ரசிகர்களுக்கு புரிகிற மாதிரி வரிகளை எளிமைப்படுத்தினேன். இதனால்தான் நிகழ்காலத்தோடு ஒன்றி போக முடிகிறது.

50 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் ஆகுமுன்னே கையைத் தொடலாகுமா வையம் இதை ஏற்குமா என்று சாவித்திரி ஒரு படத்தில் பாடி இருந்தார். அதுதான் நமது கலாசாரமாக இருந்தது. ஆனால் இப்போது திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் நிலைக்கு நாகரிக மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

ஒரு படத்தில் நடிகை டி.ஆர்.ராஜகுமாரியைக் கயிற்றால் கட்டி வைத்த காட்சி இருந்தது. அந்த கயிறு நெஞ்சின் மேல் செல்கிறது என்று தணிக்கை குழு ஆட்சேபித்து வெட்டி எறிந்தது. ஆனால் இப்போது சினிமா எந்த நிலையில் இருக்கிறது என்று எண்ணிப்பார்க்க வேண்டும். இன்னும் 200 வருடங்களில் இந்த பூமி மாசுபட்டு வாழத் தகுதியற்றதாகிவிடும் என்று வெளிநாட்டு அறிஞன் கூறியிருக்கிறான். அந்த அளவுக்கு சுற்றுச்சூழலும், பண்பாடு, கலாசாரமும் மாறி வருகிறது.

தமிழ் கலாசாரம் காப்பாற்றப்பட வேண்டும். தமிழ் பட உலகில் வாய்ப்பு கொடுத்தால் ஹாலிவுட்டையே தூக்கி சாப்பிடும் திறமைசாலிகள் இருக்கிறார்கள். வாழ்க்கையில் இருந்து கதைகளை உருவாக்கி படங்கள் எடுக்கும்படி டைரக்டர்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.