தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளில் நடிக்கும் நடிகை ஈடன் குரியகோஸ்

மும்மொழி நடிகை ஈடன் குரியகோஸ்!
சேர நாட்டுக்கும் தமிழ்த் திரையுலகிற்கும் நீண்ட காலத் தொடர்பு உண்டு.கேரளாவில் இருந்து ஏராளமான கனவுக்கன்னிகள் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி இங்கே கோலோச்சி இருக்கிறார்கள். அந்தக் ‘கேரள நாட்டிளம் பெண்கள்’ வரிசை ,அந்தக்கால பத்மினி தொடங்கி இந்தக் கால லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வரையிலான தொடர்ச்சி கொண்டது.
இன்றைய காலத்திலும் கேரளாவிலிருந்து அறிமுகங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.அப்படி நடிக்க வரும் நடிகைகளில் ஒரு தனித்துவம் கொண்ட நடிகையாக ஈடன் குரிய கோஸ் உள்ளார். பணம்,புகழ் என்பவற்றை மட்டுமே குறியாகக் கொண்டு வெற்று ஆர்வத்தில் நடிக்க வராமல் தனக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு வந்துள்ளவர் இவர்.
இவர் ஊடக மேலாண்மையில் எம்.பி.ஏ படித்தவர்.இவருக்குத் தமிழ், மலையாளம் ,இந்தி ,ஆங்கில மொழிகள் தெரியும்.
தொடக்கத்தில்
நாடக மேடையில் தோன்றி அங்கிருந்து நடிப்புப்பயிற்சியை மேற்கொண்டு திரைக்கு வந்திருக்கும் இவர் ,முறைப்படி பரதநாட்டியம் கற்றவர். அழகிப் போட்டிகளில் பங்கு பெற்று மிஸ் கேரளா, மிஸ் கோயம்புத்தூர், என்று பட்டங்கள் பெற்றவர். தென்னிந்திய அழகிப் போட்டியில் மிஸ் சவுத் இந்தியா பட்டத்திற்கு இறுதிச்சுற்று வரை சென்றவர்.
மாடலிங்காக பல்வேறு விளம்பரங்களில் நடித்துக் கேமரா முன் எப்படித் தன்னை வெளிப்படுத்த வேண்டும் என்கிற அனுபவம் கொண்டவர் .இப்படிக் கலவையான அனுபவங்களின் மூலம் தனது தகுதியை வளர்த்துக் கொண்டுதான் திரையுலகில் அறிமுகமாகி இருக்கிறார்.
தமிழில் ‘ஆண்டவ பெருமாள்’, ‘இருக்கு ஆனா இல்ல’, ‘பனி விழும் நிலவு’,
‘ஏன்டா தலையில் எண்ண வைக்கல’,
என்று வெவ்வேறு வகைத் திரைப்படங்களில் விதவிதமான பாத்திரங்கள் ஏற்று நடித்தவர்.
மலையாளத்தில் ‘காட்டுமாக்கன்’ படத்தில் நடித்தவர், துளசிதாஸ் இயக்கிய ‘கேர்ள்ஸ்’ படத்தில் பிரதான வேடமேற்றவர். இதில் பெண் கலைஞர்கள் மட்டுமே நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடகத் திரைப்பட அனுபவங்களைப் போலவே இணையத் தொடர்களிலும் பங்கெடுத்தவர்.
‘மாயத்திரை’, ‘குருதிக்காலம் ‘போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.
தமிழ், மலையாளம் மொழிகளைத் தொடர்ந்து தெலுங்கில் ‘ஸ்ரீரஸ்து சுபமஸ்து’
படத்தில் நடித்துள்ளார் .ஆக தென்னிந்திய நடிகையாகி விட்டார்.
சற்றே இடைவெளிக்குப்பின் மறுபிரவேசம் போலத் திரைப்படங்களில் இப்போது பரபரப்பாகி இருக்கிறார்.
இப்போது தமிழில் இரண்டு புதிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும் மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
அந்த வகையில் இப்போது வந்துள்ள வாய்ப்புகளின் மூலம் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார் என்றே கூற வேண்டும்.
இதுவரை நடித்த படங்களில் பேசும் விழிகளைக் கொண்ட திறமை உள்ள நடிகை என்றும் ‘ஒன் டேக் ஆர்டிஸ்ட்’ என்றும் நேரம் தவறாமைக்கும் அர்ப்பணிப்புக்கும் உதாரணமாக இருக்கிறார் என்றும் படக்குழுவினரால் பாராட்டப் பட்டிருக்கிறார்.
நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் தனக்கான தேர்ந்தெடுத்த பாத்திரங்களில் நடிப்பதற்கு பெரிதும் விருப்பமாக இருக்கிறார் ஈடன் குரியகோஸ்.
தனது பாதை
நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்வதே என்பதை நிரூபித்து, மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்க விரும்புகிறார். பொழுதுபோக்குத் துறை தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், ஈடன் தனது படைப்பாற்றலுக்குச் சவால் விடுவதிலும், ஈர்க்கக்கூடிய கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பதிலும் உறுதியாக இருக்கிறார். இது அவரது மறுபிரவேச வருகையைக் கவனிக்கத்தக்க ஒன்றாக ஆக்குகிறது.
மென்மேலும் திரைப்படங்களைப் பார்த்து தினந்தோறும் கற்றுக் கொண்டே இருப்பதாகக் கூறும் இவர் , படை திரட்டிக் கொண்டுதான் போர் தொடுக்க வந்துள்ளார் . அதாவது தகுதிகளை வளர்த்துக் கொண்டுதான் திரைக்களத்திற்கு வந்துள்ளார்.எனவே இவருக்கு வெற்றி நிச்சயம் என்று நம்பலாம்.

