full screen background image
Search
Friday 3 May 2024
  • :
  • :
Latest Update

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் – விமர்சனம்!

விஜய் சேதுபதியைத் தேடி நல்ல கதைகளோடு இயக்குனர்கள் போகிறார்களா? இல்லை, நல்ல இயக்குனர்களை தேடி விஜய் சேதுபதி வளைத்துப் பிடிக்கிறாரா?… வரிசையாக இப்படி நல்ல நல்ல படங்களை எப்படித்தான் பிடிக்கிறாரோ மனிதர்!

கதையைப் பிடிப்பது மட்டுமல்ல, அந்தக் கதைக்கு என்ன தேவையோ அதை அச்சு பிசகாமல் நடித்துத் தருவதிலும் அவர் வேறு ஒரு ஆளாக நிற்கிறார். திருஷ்டி கோலி போட்டுக் கொள்ளுங்கள் மக்கள் செல்வரே!

விஜய் சேதுபதிக்கு அப்புறம் வருவோம். “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” படத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் கௌதம் கார்த்திக் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். “கடல்” படத்தில் அறிமுகமாகி “இந்திரஜித்” வரை கௌதம் கார்த்திக் எத்தைனையோ படங்களில் வந்து போயிருந்தாலும் முதல் முறையாக இந்தப் படத்தில் “நடித்து” முத்திரை பதித்திருக்கிறார்.. என்ன ஒரு எனர்ஜி? என்ன ஒரு டைமிங்க்? இதுநாள் கார்த்திக் மகன் என்று எந்த இயக்குனரும் இவரை சக்கைப் பிழியாமலே விட்டு விட்டார்கள் போல. ஆனால், ஆறுமுக குமார் பெண்டு நிமிர்த்தியிருக்கிறார். வாழ்த்துகள் கௌதம் கார்த்திக்.

“கதை என்னான்னு சொல்லுங்களேன்” என்று கேட்பது புரிகிறது.

ஒரு மர்மமான மலை கிராமம். அவர்களுக்கு களவே தொழில், எமனே தெய்வம். விசித்திரமான கலாச்சாரத்தையும் பழக்கவழக்கத்தையும் கொண்ட அவர்கள், களவையே கொள்கை வகுத்து செய்து வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் சுழற்சி முறையில் ஆட்களைத் தேர்ந்தெடுத்து களவுக்கு அனுப்புவதே அங்குள்ள முறை. அந்த வழக்கத்தின்படி எமன் மற்றும் இரண்டு பேரை தேர்ந்தெடுத்து களவுக்கு அனுப்பி வைக்கிறது அந்த கிராமம்.

களவுக்கு போன இடத்தில் ஒரு பெண்ணை பார்க்கும் எமன், அந்த பெண்ணை கடத்த வேண்டும் என அடம் பிடிக்கிறான். மற்ற இருவரும் பெண்ணைக் கடத்துவது நம் குல வழக்கத்தில் கிடையாது என்று தடுக்கிறார்கள். அதே பெண்ணிடம் நட்பாக பழகும் இன்னொரு இளைஞனுக்கு அவளின் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்த பெண்ணுக்கும், அந்த இளைஞன் மீது கனிவு பிறக்கிறது. அந்த சமயத்தில் எமன், அந்தப் பெண்ணைக் கடத்துகிறான்.

அந்தப் பெண்ணை எமன் ஏன் கடத்தினான்?, அந்தப் பெண்ணும், இளைஞனும் சேர்ந்தார்களா? என்பதை ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லியிருக்கிறார்கள்.

எம்மாடி.. சிரிப்பென்றால் சிரிப்பு, அப்படியொரு சிரிப்பு படம் முழுவதிலும். படம் ஆரம்பித்த கொஞ்ச நேரம் எதுவுமே புரியாத மாதிரி இருந்தாலும், நிகாரிகா கடத்தப்படும் இடத்திலிருந்து சூடு பிடிக்கிறது. கிளைமாக்ஸிற்கு முன்பும் அதே போல கொஞ்சம் முரண்டு பிடிக்கிறது. இந்த இரண்டு இடங்களைத் தவிர்த்திருந்தால் படம் ராக்கெட் வேகத்தில் பறந்திருக்கும்.

நிகாரிகா.. தமிழ் சினிமாவின் புது அமுல் பேபி. அழகாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நேர்த்தியாக நடிக்கவும் செய்கிறார். வாம்மா வாம்மா. வெல்கம் டூ தமிழ் சினிமா.

“ஃப்ரெண்டு, லவ் மேட்டரு” டேனியல், இந்தப் படத்திலும் நண்பனால் சிக்கலில் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கும் கேரக்டர். கரும்பு திண்ணக் கூலியா? என்பது போல் சும்மா புகுந்து விளையாடுகிறார். சபாஷ் பாபு!. டேனியலுக்கு ஈகுவலாக “டஃப்” கொடுக்கிறார்கள் ரமேஷ் திலக்கும், ராஜ்குமாரும். அதிலும் ராஜ்குமார், சரவெடி கொளுத்துகிறார்.

காயத்ரிக்கும் நல்ல வேடம். அதனை சிறப்பாக செய்திருக்கிறார். கல்பனா, முத்து உள்ளிட்ட படத்தின் அத்தனை பேருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை தான் படத்தின் “ஹைலைட்”. சீரியஸான இடங்களில் கூட இவர் கசிய விட்டிருக்கும் மெல்லிய ஒலி சிரிப்பு மூட்டுகிறது. “மாஸ்” மோடிலிருந்து, காமெடி மோடுக்குத் தாவும் அத்தனை இடங்களிலும் தியேட்டர் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறது. பாடல்களில் புதுமையை புகுத்தி ரசிக்கும்படி தந்திருக்கிறார்.

கலை இயக்குனர் ஏ.கே.முத்து பழங்குடியினர் வசிப்பிடத்தை பார்த்து பார்த்து வடிவமைத்திருக்கிறார். அதன் மொத்த அழகையும் அப்படியே கேமராவுக்குள் “லபக்”கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீசரவணன். எடிட்டர் கோவிந்தராஜின் கத்தரி, கிளைமாக்ஸிற்கு முன்பான காட்சிகளில் கொஞ்சம் பாய்ந்திருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

ஒரு கற்பனைக் கதை, கிட்டத்தட்ட “ஃபேண்டசி” ரகம். அதை இந்தளவிற்கு ஹியூமராக சொல்ல முடியுமா? என ஆச்சர்யப்பட வைக்கிறார் பி.ஆறுமுகக் குமார். மீதி பாராட்டுகளை உங்க அடுத்த படத்தை பார்த்திட்டு எழுதுறோம் ப்ரோ!

மீண்டும் விஜய் சேதுபதி, இவரைத் தேடி நல்ல “கதை”களோடு இயக்குனர்கள் போகிறார்களா? இல்லை, நல்லக் “கதை” சொல்கிற இயக்குனர்களை தேடி இவர் வளைத்துப் பிடிக்கிறாரா?… வரிசையாக இப்படி நல்ல நல்ல படங்களை எப்படித்தான் பிடிக்கிறாரோ மனிதர்!

கடைசியாக ஒரே கேள்வி இயக்குனருக்கு, அந்த பழங்குடி கிராமத்துல எல்லோருமே இங்கிலீஷ் பேசுராங்களே எப்படி ப்ரோ???? அப்புறம் ஏன் ப்ரோ அந்த “ராமன் – ராவணன்” வசனத்தைத் தூக்குனீங்க???