full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

டி.டி.வி. தினகரனுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட தினகரன் கடந்த 2-ந்தேதி ஜாமீனில் விடுதலையானார்.

சிறையில் இருந்து வெளிவந்த தினகரனுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மறுநாள் சென்னை திரும்பிய போதும் விமான நிலையத்தில் தினகரனை அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி வரவேற்றனர்.

தினகரன் சிறை செல்வதற்கு முன்னாள் அவரைக் கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்திருப்பதாக எடப்பாடி அணியினர் அறிவித்திருந்தனர். ஆனால் ஜாமீனில் விடுதலையான தினகரன் என்னை நீக்குவதற்கு பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும், கட்சி பணிகளில் மீண்டும் ஈடுபடுவேன் என்றும் தினகரன் தெரிவித்தார்.

கடந்த 3-ந்தேதியில் இருந்து ஆதரவாளர்களுடன் பெசன்ட்நகர் வீட்டில் தினகரன் ஆலோசனை நடத்தினார். அப்போது அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் திரண்டு சென்று தினகரனை சந்தித்தனர்.

முன்னாள் அமைச்சர்களான தோப்பு வெங்கடாசலம், செந்தில்பாலாஜி, பழனியப்பன், எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட 32 எம்.எல்.ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இது எடப்பாடி அணிக்கு சிக்கலை ஏற்படுத்துமோ என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. அமைச்சர் ஜெயக்குமார் தினகரனுக்கு எதிரான கருத்துக்களை கூறி இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமாரை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனால் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் தினகரன் திடீரென நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் சிலரை சந்திக்க அவர் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் டெல்லி சென்ற தினகரன் நேற்று இரவு சென்னை திரும்பினார். இன்று பெசன்ட்நகரில் உள்ள தனது வீட்டில் தினகரன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிலையில் ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் இன்று தினகரனை சந்தித்து பேசினார். அப்போது அவர் தனது ஆதரவை தெரிவித்தார். இதன் மூலம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.