மாயபிம்பம் திரைவிமர்சனம்
நடிகர்கள்:ஜானகி, ஆகாஷ்,ஹரி ருத்ரன்,ராஜேஷ், அருண் குமார்,
இசை:நந்தா,
ஒளிப்பதிவு:எட்வின்சகாய்,
இயக்கம்:கே.ஜே. சுரேந்தர்.
மாய பிம்பம் முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில், அறிமுக இயக்குநர் கே.ஜே. சுரேந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாய பிம்பம்’ ஒரு அரிதான, அர்த்தமுள்ள காதல்–வாழ்க்கை அனுபவத் திரைப்படமாக உருவெடுத்துள்ளது. தமிழ் சினிமாவில் நல்ல கதையும், சிறந்த திரைக்கதையும், உணர்வுப்பூர்வமான காட்சியமைப்பும் ஒருங்கே கிடைப்பது அரிது. ஆனால் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே அந்தக் குறையை போக்கும் விதமாக, மனதை நெகிழ வைக்கும் ஒரு படைப்பை இயக்குநர் கே.ஜே. சுரேந்தர் வழங்கியுள்ளார்.
‘கூடா நட்பு’, ‘வீண் பெருமை’, ‘எனக்குத்தான் எல்லாம் தெரியும்’ என்ற அகந்தை, தேவையற்ற பேச்சு – இவை மனித வாழ்வில் எவ்வளவு பெரிய பிரச்சனைகளுக்கு விதை போடுகின்றன என்பதை நுட்பமான கலை உணர்வுடன் சொல்லும் கதையே ‘மாய பிம்பம்’.
கடலூரை பின்னணியாக கொண்டு, நான்கு நெருங்கிய நண்பர்களின் வாழ்க்கையைச் சுற்றி கதை நகர்கிறது. அவர்களில் ஒருவர் கேபிள் டிவி கடை நடத்துபவர்; பெண்களை எளிதில் கவரும், அவர்களை பொருள்போல் ‘எடை போடும்’ மனநிலையுடன் வாழ்பவர். மற்றொருவர் மருத்துவக் கல்லூரி மாணவன். இவர்களின் நட்பு வட்டத்தில் நிகழும் ஒரு சம்பவம் – குறிப்பாக ஒரு பெண்ணை தவறாக புரிந்து கொண்டு தவறாக பேசுவதால் ஏற்படும் விபரீதங்களே கதையின் மையம்.

அறிமுக நடிகர்கள் அனைவருமே தங்களது கதாபாத்திரங்களை ஆழமாக உணர்ந்து, மிக இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். நாயகன்–நாயகி இருவரும் உணர்ச்சிப் பூர்வமான காட்சிகளில் மிளிர்கிறார்கள். குறிப்பாக நாயகியின் நடிப்பு தமிழ் சினிமாவிற்கு ஒரு சிறந்த முகமாக அமைந்திருக்கும் வகையில் உள்ளது. திருமணத்தின் காரணமாக அவர் இனி நடிப்பாரா என்ற கேள்வி வருத்தத்தை ஏற்படுத்தினாலும், இந்தப் படத்தில் அவர் பதித்துள்ள முத்திரை மறக்க முடியாதது. நாயகனும் தன் பாத்திரத்தின் உள் உணர்வுகளை மிக எதார்த்தமாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.
நாயகனின் குடும்ப உறுப்பினர்கள் – அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, குழந்தை என ஒவ்வொருவரும் கதைக்கு தேவையான உணர்ச்சி வலுவை அழகாக சேர்க்கிறார்கள். நாயகியின் தோழி உட்பட, சிறிய கதாபாத்திரங்களில் தோன்றும் அனைவரும் கூட தங்கள் பங்கினை முழுமையாக செய்து படத்திற்கு உயிர் ஊட்டுகிறார்கள்.
இயக்குநர் கே.ஜே. சுரேந்தரின் கதைக்கருவை விட, அதை திரைக்கதையாக வடித்திருக்கும் முறை மிகப்பெரிய பலம். பல இடங்களில் நம்மை நெகிழ வைக்கும் உணர்ச்சி தருணங்கள், அதே சமயம் ரசிக்க வைக்கும் சினிமா தருணங்கள் என்று படம் முழுவதும் பார்வையாளரை கட்டிப்போடுகிறார்.
இசையமைப்பாளரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. பின்னணி இசையும், பாடல்களும் காட்சிகளோடு கரைந்து, கதையின் உணர்வுகளை மேலும் ஆழப்படுத்துகின்றன.
‘மாய பிம்பம்’ வெறும் ஒரு காதல் கதை அல்ல; மனித மனத்தின் பிம்பங்களை, தவறான புரிதல்களின் விளைவுகளை, உண்மையான உணர்வுகளின் வலிமையை சொல்லும் ஒரு கலைநயமிக்க படைப்பு. இந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் ஒன்றாக இது இடம் பெறும் என்பதில் ஐயமில்லை. மனதை வருடும், சிந்திக்க வைக்கும், உணர்ச்சியை நெகிழச் செய்யும் இந்த காதல் காவியம், அனைவரும் திரையரங்கில் காண வேண்டிய ஒரு அவசியமான அனுபவம்

