இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு நடிகர் உதயா கண்ணீர் அஞ்சலி;

General News News

இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு நடிகர் உதயா கண்ணீர் அஞ்சலி; இறுதி சடங்கில் அரசு மரியாதை வழங்கும் தமிழக அரசுக்கு நன்றி

இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று மறைந்ததை தொடர்ந்து நடிகர் உதயா தனது கண்ணீர் அஞ்சலியை செலுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

“இயக்குநர் இமயம் அப்பா பாரதிராஜா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி என்னை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சிறிது காலத்திற்கு முன்பு தான் மருத்துவமனையில் இருந்து குணமாகி வீடு வந்தார். மீண்டும் பழையபடி ஆகி விடுவார் என்று நாங்கள் அனைவரும் நம்பிக் கொண்டு இருந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார் என்ற செய்தி மிகவும் துயரத்தை தந்துள்ளது.

அவரை நான் அப்பா என்று தான் அழைப்பேன். மனோஜை மட்டுமல்ல, என்னையும் அவர் மகனாகத்தான் பார்ப்பார். என்னை மட்டுமல்ல, திரைத்துறையில் பலரை அவர் தன்னுடைய பிள்ளைகளாகத்தான் கருதுவார்.

‘கேப்டன் மகன்’ படத்தை அவர் இயக்கி கொண்டிருந்தபோது என்னை ஒருமுறை பார்த்தார். என்னை பார்த்தவுடன் எனது தந்தையார் திரு ஏ.எல். அழகப்பன் அவர்களிடம் “உதயா நடிகனாகலாமே, பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறானே, ‘அலைகள் ஓய்வதில்லை’ மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் செய்து அவனை நடிகனாக்க வேண்டும்,” என்றார். நான் நடிகனாவதற்கு முதன்முதலில் விதை போட்டவர் பாரதிராஜா அப்பா தான். அவருடைய அந்த வார்த்தைகளுக்கு பின்னர் தான் நடிப்பில் நான் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

ஒரு நடிகனாக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் என்னை ஊக்குவித்தவர் அவர். நான் இயக்கிய ‘செக்யூரிட்டி’ குறும்படத்தை பார்த்துவிட்டு “டைரக்ஷன் உனக்கு நன்றாக வருகிறது” என்று உச்சிமுகர்ந்து பாராட்டினார். அவரது சொற்கள் என்றென்றும் என் மனதில் நிலைத்து நிற்கும். என்னுடைய படங்களின் பூஜையாகட்டும், எனது தம்பி ஏ எல் விஜய்யின் படங்களாகட்டும், அனைத்திற்கும் அவரது வாழ்த்தும், ஆதரவும் என்றும் தவறாமல் வரும்.

அவரது மகன் மனோஜின் மறைவில் இருந்தே நாங்கள் இன்னும் மீளாத நிலையில் பாரதிராஜா அப்பாவின் மரணம் இன்னும் எங்களை சோகத்தில் தள்ளி உள்ளது. மனோஜின் மரணத்திலிருந்தே அவர் மிகவும் உடைந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அவருடைய குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருடைய படங்கள் ஒவ்வொன்றும் திரை உலகத்திற்கு பாடங்கள். எத்தனையோ நடிகர்களை, நடிகைகளை, தொழில்நுட்ப கலைஞர்களை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார், ஊக்குவித்துள்ளார். அப்பேர்ப்பட்ட இயக்குநர் இமயம் அவர். அவரை சினிமாவின் டிக்ஷனரி என்று சொல்லலாம். அவர் மறைந்தாலும் அவரது படங்களும், அவரது புகழும் என்றென்றும் நிலைத்து இனிவரும் தலைமுறையினருக்கும் எடுத்துக்காட்டுகளாக இருக்கும். காலத்தால் அழிக்க முடியாத மனிதர் அவர். We will miss you, Appa.

இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் காலமாகியுள்ள நிலையில் மாண்புமிகு முதல்வர் விஜய் அண்ணா அவர்கள் தலைமையிலான தமிழக அரசு பாரதிராஜா அப்பா அவர்களின் இறுதி சடங்கில் அரசு மரியாதை வழங்க முடிவு செய்திருப்பதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

***