full screen background image
Search
Saturday 4 May 2024
  • :
  • :
Latest Update

தயாரிப்பாளரை மிரட்டும் ‘அ’ நடிகர்

சர்ச்சைக்கு பெயர் போன அந்த நடிகர் கடைசியாக நடித்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து, மூன்று ‘அ’ க்களை கொண்ட படத்தில் நடித்து வருகிறார். பொதுவாகவே அந்த நடிகரின் படம் என்றால் சொன்ன நேரத்தில், சொன்னபடி ரிலீசாவதில்லை என்பது நாம் அறிந்ததே.

ஆனால் நடிகர் மீதான அந்த பெயரை நான் மாற்றித் தீருவேன், படத்தை சொன்ன நேரத்தில் ரிலீஸ் செய்வேன் என்று படத்தின் இயக்குநர் வைராக்கியத்துடன் இருக்கிறார். ஆனால் இயக்குநரின் சபதம் பலிப்பதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். அதுவும் நடிகர் மூலமாகத் தான் அந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அது என்னவென்றால், அந்த படத்தில் நடிகரின் அறிமுக பாடலை பிரபல கவிஞர் ஒருவர் எழுதிக் கொடுத்திருக்கிறார். அந்த பாடலை பிரம்மாண்டமாக எடுக்க வேண்டும் என்று இயக்குநரிடம் அந்த நடிகர் நச்சரிக்கிறாராம். நடிகரின் விருப்பத்தை தயாரிப்பாளரிடம் சென்று இயக்குநர் தெரிவிக்க, ஏற்கனவே படத்தின் பட்ஜெட் எகிறிவிட்டது, எனவே பாடலை பிரம்மாண்டமாக எடுக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம்.

இதையடுத்து தயாரிப்பாளர் கூறியதை, நடிகரின் காதில் அப்படியே போட்டிருக்கிறார் இயக்குநர். தயாரிப்பாளரின் இந்த பதிலை கேட்டு கொந்தளித்த அந்த நடிகர், தயாரிப்பாளர் ஒத்துழைக்காவிட்டால், படத்தைப் பார்க்க வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு தானே அறிவுறுத்துவேன் என்று நடிகர் மிரட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

ஒருபக்கம் நடிகர் பிடிவாதமாக இருக்க, மறுபக்கம் தயாரிப்பாளர் அதேநிலையில் நிற்க, அந்த இயக்குநர் நடுவில் நின்று கொண்டு செய்வதறியாமல் சிக்கித் தவிப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.