யூத்’ – திரைவிமர்சனம் 

cinema news movie review

               யூத்’ – திரைவிமர்சனம் 

நடிகர்கள்: கென் கருணாஸ்,சுராஜ் வெஞ்சரமூடு,தேவதர்ஷினி,அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரயான்ஷி யாதவ், மற்றும் பலர்.

இசை :ஜி.வி.பிரகாஷ் குமார்,

ஒளிப்பதிவு :விக்கி,

இயக்கம்: கென் கருணாஸ்,

இன்றைய இளைய தலைமுறையின் பள்ளி பருவத்திலும் கல்லூரி காலத்திலும் வருகின்ற  காதல் கனவுகளையும், மற்றும் பெற்றோர்களின் ஆசைகளும் பாசமும் இரண்டும் இணைந்து  சொல்ல வந்திருக்கும் திரைப்படம் தான் யூத்.

காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியரின் மகனாக இருக்கும் கென், தனது பள்ளி வாழ்க்கையிலேயே காதலை கண்டுபிடித்து, அதையே வாழ்நாள் உறவாக மாற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் பயணம் செய்கிறான். அவன் வாழ்க்கையில் சந்திக்கும் மூன்று காதல் அனுபவங்கள், ஒரு இளைஞனின் கனவுகளாக மட்டுமல்லாமல், அவன் குடும்பத்தின் நிதர்சனங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. இந்த பயணம் எங்கே முடிகிறது என்பதே படத்தின் மையம்.

நடிப்பில், சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் தேவதர்ஷினி தங்களின் அனுபவத்தை முழுமையாக வெளிப்படுத்துகின்றனர். குறிப்பாக, மிடில் கிளாஸ்  வாழ்க்கையில் தோல்வியை சந்தித்த ஒரு அப்பாவாக தன் பயத்தை சுராஜ் எதார்த்தமாக  வெளிப்படுத்துகிறார். அதற்கு இணையாக, தேவதர்ஷினியின் பாசமிகு தாய் உருவம் கதைக்கு உணர்ச்சி பலத்தை அளிக்கிறது.

இந்த படத்தின் முக்கிய ஆச்சர்யம் கென் கருணாஸ். இயக்குனராகவும், நாயகனாகவும் இரட்டை பொறுப்பை ஏற்று, முதல் முயற்சியிலேயே தன்னம்பிக்கையுடன் களம் இறங்கியுள்ளார். காமெடி, நடனம், உணர்ச்சி ஆகிய எல்லா தளங்களிலும் தன்னுடைய திறமையை நிரூபிக்கிறார். மேலும், கதையை தனக்கே மையப்படுத்தாமல், மற்ற கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது.

படத்தின் மைய கருத்து  “காதல் வரலாம், போகலாம்; ஆனால் பெற்றோரின் அன்பு நிலையானது”  என்பது எளிமையாகவும் தாக்கத்துடனும் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக, “தோல்வியடைந்த அப்பா, தன் மகன் அப்படியே ஆகிவிடக் கூடாது” என்ற மனநிலையை படம் நுட்பமாக சித்தரிக்கிறது.

நாயகிகளாக வரும் அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரயான்ஷி யாதவ் ஆகியோர் தங்களுக்கான இடத்தை சரியாக நிரப்புகின்றனர். துணை கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்துக்கு இயல்பாக இணைகின்றனர். ஒளிப்பதிவாளர் விக்கி, காட்சிகளை வண்ணமயமாக பதிவு செய்து, இளைய தலைமுறையின் மனநிலைக்கு ஏற்ற காட்சிப்பரப்பை உருவாக்கியுள்ளார்.

இசையில் ஜிவி பிரகாஷ் குமார் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறார். பாடல்கள் மட்டுமல்லாமல், பின்னணி இசையிம் பலம் தான்.

முதல் இருந்து இறுதி வரைக்கும் நம்மை நகைச்சுவையில் ஆழ்த்துகிறது  இரண்டாம் பாதியில் கதை வேகம் பெறுகிறது. இறுதிக்கட்டம் உணர்ச்சி மற்றும் திருப்தி கலந்த முடிவை அளிக்கிறது.

மொத்தத்தில், ‘யூத்’ வண்ணமயமான படம்.