full screen background image
Search
Friday 3 May 2024
  • :
  • :
Latest Update

உயர்ந்த மனிதன் சைனா வரை போகும் – எஸ்.ஜே.சூர்யா

திருச்செந்தூர் முருகன் productions என்ற படநிறுவனத்தின் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் five element pictures இணைந்து தயாரிக்கும் , மிக பிரமாண்டமான இந்த படத்துக்கு “உயர்ந்த மனிதன்”  என்று தலைப்பிடப்பட்டு உள்ளது. இந்த படம் தமிழ் , ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் படமாக்க பட உள்ளது. விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு , வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற “கள்வனின் காதலி”  படத்தை இயக்கிய தமிழ்வாணன் இந்த படத்தை இயக்குகிறார். 

 
முன்னதாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர் தமிழ்வாணன், தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது படத்தின் தலைப்பையும், போஸ்டரையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். அந்த காணொளியை பத்திரிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியோடு திரையிட்டு காண்பித்தார் எஸ்.ஜே.சூர்யா.
 
எத்தனையோ தருணங்களில் நாம் சந்தித்திருக்கிறோம். ஆனால் இந்த சந்திப்பு எனக்கு மிகவும் ஸ்பெஷல். நேற்று ட்விட்டரில் என் அடுத்த படத்தை பற்றிய பிரமாண்ட அறிவிப்பு இருக்கும் என பதிவிட்டதற்கு மிகப்பெரிய ரெஸ்பான்ஸ். நான் அடுத்து நடிக்கும் படம் உயர்ந்த மனிதன். தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிறது. இந்தியன் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சார் முதன்முறையாக இந்த தமிழ் படத்தில் நடிக்கிறார். நான் இந்தியில் நடிகனாக அறிமுகம் ஆகிறேன். நான் முக்கியமாக நன்றி சொல்ல வேண்டியது இயக்குனர் தமிழ்வாணன் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணன் ஆகியோருக்கு தான். 
 
இயக்குனர் கொண்டு வந்த கதை தான் அமிதாப் சார் வரைக்கும் இந்த படத்தை கொண்டு சென்றிருக்கிறது. 2  வருடங்களுக்கு மேலாக இந்த படத்துக்கான வேலைகள் நடந்து வருகிறது. திரைக்கதை மட்டும் ஒரு வருடம் எழுதியிருக்கிறார். ஸ்கிரிப்டை அமிதாப் பச்சன் சாரிடம் கொண்டு சென்று கொடுத்தோம். எல்லாம் படித்து முடித்த பிறகு அவரை இறுதியாக ஒரு முறை சந்தித்தோம். கதை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது, சில சந்தேகங்கள் இருக்கின்றன, அவற்றை விளக்க வேண்டும் என்றார். அதை கேட்ட பிறகு கண்டிப்பாக நான் நடிக்கிறேன் என்றார். அதை யார் அறிவிக்க முடியும் என்றால் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் தான் முடியும். அவரும் உடனடியாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே அழைத்து எங்களை வாழ்த்தி பட அறிவிப்பை வெளியிட்டார்.
 
நான் ஏதோ சாதனை செய்து விட்டது போல பேசுவதாக நினைக்க வேண்டாம். இந்த படத்தை ஒருங்கிணைத்ததே எனக்கு ஒரு பெரிய சாதனை தான். அமிதாப் பச்சன் சாரின் 2019 காலண்டர் காட்டும்போது நானே வியந்து போனேன், 5 நாட்கள் கூட எங்கள் படத்துக்கு அதிகமாக ஒதுக்க முடியாது என்ற நிலையில் மிகவும் பிஸியாக இருந்தார். 2019ல் மட்டும் 6 படம், கோன் பனேகா க்ரோர்பதி, விளம்பரங்கள் என இந்த வயதிலும் அவ்வளவு பிஸியாக இருக்கிறார். அவர் நமக்கெல்லாம் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். இந்த படத்துக்கு மிக பொருத்தமான தலைப்பு நடிகர் திலகம் சிவாஜி சார் அவர்களின் உயர்ந்த மனிதன். இந்த தலைப்பை ஏவிஎம்மிடம் இருந்து வாங்கியிருக்கிறோம். இந்த படத்துக்கு மிகப்பெரிய ஆதரவை கொடுத்த ஏஆர் முருகதாஸ் அவரகளுக்கும் நன்றி. கஷ்டத்தில் இருக்கும்போது இயக்குனர் சொன்ன வார்த்தைகளே தெம்பை கொடுத்தது. இந்த படம் இந்தியா முழுக்க மட்டுமின்றி சைனா வரை போகும். கதை அப்படி அமைந்திருக்கிறது என்றார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா.