full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

திறப்பு விழா – விமர்சனம்


நடிகை ரஹானா அவளது அப்பாவான ஜி.எம்.குமாருடன் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறாள். குடிப்பழக்கத்திற்கு அடிமையான அப்பாவால் தனது குடும்பத்தை இழந்த நாயகன் ஜெயஆனந்த், அவனது சொந்த ஊரில் உள்ள மதுபானக் கடையில் வேலைக்கு வருகிறான்.

அந்த மதுபானக் கடையின், பார்களில் போலி மதுபான விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. ஒரு கட்டத்தில் இது நாயகன் ஜெய ஆனந்த்க்கு தெரிய வர, அதனை எதிர்த்து போராடுகிறார். இதனால் ஜெய ஆனந்த்க்கு பல்வேறு பிரச்சினைகள் வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, ஜெயஆனந்தின் மீது நாயகி ரஹானாவுக்கு காதல் வருகிறது. நாயகன் மீதான தனது காதலை அவரிடம் தெரிவிக்கும் போது, டாஸ்மாக் கடையை மூடச் செய்யும் வரை தனக்கு எதுவும் முக்கியமில்லை என்று கூறி நாயகியின் காதலுக்கு ஜெயஆனந்த் மறுப்பு தெரிவிக்கிறார்.

இறுதியில் பிரச்சனைகளில் இருந்து ஜெய ஆனந்த் விடுபட்டாரா, அவரின் லட்சியம் நிறைவேறியதா, நாயகியுடன் இணைந்தாரா என்பதே படத்தின் மீதிக்கதை.

புதுமுக நாயகன் ஜெயஆனந்த் தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மதுக்கடைக்கு எதிராக போராடும் ஒரு இளைஞனாக அவரது துடிப்பு படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. நாயகி ரஹானா தனது கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நின்றிருக்கிறார். அவரது இயல்பான நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது.

குடிகாரர்களாக ஜி.எம்.குமார், பசங்க சிவக்குமார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மற்றபடி பாவா லஷ்மன், முனிஸ், விஜய் சந்தர், கவிதா பாலாஜி, ரெங்கநாயகி என அனைவரும் அவரவர் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக அளித்திருக்கின்றனர்.

தற்போதைய சூழலின் முக்கிய பிரச்சனையாக கருதப்படும் மதுபானக் கடையால் ஏற்படும் பாதிப்பு, மதுப்பிரியர்களால் அவர்களது குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்சனையை சிறப்பாக திரையில் காட்டியிக்கிறார் படத்தின் இயக்குநர் கே.ஜி.வீரமணி.

மது, மதுக்கடையால் ஏற்படும் பிரச்சனையை சுளிப்பு இல்லாமல் சிறப்பாக இயக்கி இருப்பதற்காக வீரமணிக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம். நிலம் என்பவரின் வசனங்கள் படத்திற்கு மேலும் பலத்தை கூட்டியிருக்கிறது. மதுவுக்கு அடிமையாகி குடும்பத்தை இழக்காமல், தனது மனைவி, குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதை படத்தின் இந்த மூலம் உணர்த்தி இருக்கின்றனர்.

குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல்நலத்தை கெடுக்கும் என்பதற்கு சாட்சியாக தற்போது நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், மதுவுக்கு எதிராக இப்படம் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.பி.செல்வா ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. படத்தின் பின்னணி இசையில் வசந்தரமேஸ் முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது.

சினிமாவின் பார்வையில் `திறப்பு விழா’ டாஸ்மாக்கின் மூடு விழா