full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

களவாடிய பொழுதுகளின் நினைவுகள்!

“அழகி” மட்டுமே போதும், தங்கர் பச்சானின் கதை சொல்லும் அழகை உணர்ந்து கொள்வதற்கு. மண்ணையும் உறவுகளுக்கிடையிலான உணர்வுகளையும் எந்த பாசாங்கும் இல்லாமல் பிரதிபலிக்கிற அவரது படைப்புகள் காலத்திற்கும் அவரது பெயர் சொல்லிக் கொண்டே இருக்கும்.

“கவர்ச்சி, பிரம்மாண்டம், வசூல்” இந்த வார்த்தைகள் பெரும்பாலும் திரைத்துறையை ஆளத் தொடங்கியிருந்த காலத்தில், ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநர் அவதாரம் எடுத்தவர் தங்கர் பச்சான். இயக்குநராகிய முதல் படத்திலேயே தரமான படத்தோடு வந்து அனைவரின் புருவங்களை உயர வைத்தார். “அழகி” தனலக்ஷ்மியை இன்றும் மறந்திருக்க மாட்டார்கள் தமிழ் ரசிகர்கள், “தனம்” தமிழ் ரசிகர்களுக்கு தங்கர் பச்சான் அறிமுகப்படுத்திய அற்புதமான பெண்.

“சொல்ல மறந்த கதை ” சிவதானுவும், பார்வதியும் இப்போதும் ஏதாவது ஒரு ஊரில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள். பணக்கார வீடுகளில் மருமகனாக வாக்கப்பட்டுவிட்டு, சுயமரியாதை இழந்து பொறுமிக் கிடக்கிற பல ஆயிரம் சிவதானுகளின் உணர்வுகளை அப்பட்டமாக படம்பிடித்துக் காட்டியிருப்பார் தங்கர் பச்சான். எதார்த்தங்களை எந்த விதிமீறல்களும் இல்லாமல் திரைவழியே காண்பிக்கிற அந்த துணிச்சல் அவருக்கான சண்மானங்களை “பொருளாக” வேண்டுமானால் தராமல் போயிருக்கலாம், ஆனால் “தரமான” இயக்குநர் என்ற அடையாளத்தை அவருக்குத் தந்தது.

“தென்றல்” தாமரைச்ச்செல்வியை மறக்க முடியாது. காதலின் அத்தனை இடங்களையும் தாமரையின் கைகோர்த்துக் கொண்டு அழைத்துச் சென்று கலங்கடித்திருப்பார். “அடி தோழி அடி தோழி, அடை காக்கும் சிறு கோழி” என சிறுவயது தாமரை காதலுற்றுக் குதித்தாடும் போது, மனமும் அந்தப் பாவடை தாவணிக்காரி கூடவே துள்ளும். நலங்கிள்ளி என்னும் கவிஞன் சிறையில் அதிர்ந்து பாடுகிற “கயிறு கட்டி கடலின் அலையை நிறுத்த முடியுமா? விரலை வெட்டி பறையின் இசையை அடக்க முடியுமா?.. இது விடுதலை இசை! புது வீறுகொள் இசை! வேட்டையாடி வாழ்ந்த எங்கள் பாட்டனின் இசை!” பாடலின் வாயிலாக கிளர்ந்தெழ வைத்துவிட்டு.. அதே கவிஞனை தாமரையின் சமாதியில் குற்றவளியாய் நம்முன் நிறுத்தி வைத்திருப்பார்.

சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைப்பேசி என இவரது படங்கள் அனைத்துமே ஒப்பனைகளுக்குக் கட்டுப்படாதவையாகவே இருந்திருக்கின்றன. இவற்றில் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, அம்மாவின் கைப்பேசி தவிர எல்லாமே வாழ்வியலுக்குள் ஊடுறுவி பயணிக்கும் கதைகள். ஒன்பது ரூபாய் நோட்டு “மாதவர்” ஒவ்வொரு கிராமத்திலும் வேறு ஏதாவது பெயரில் வாழ்ந்து கொண்டிருப்பவராகத் தான் இருப்பார்.

அதீதமான புனைவுகள் இன்றி, ஒரு நாவல் வாசிக்கிற அனுபவத்தை தரக்கூடியவை தங்கர் பச்சானின் படங்கள். அவரே ஒரு நாவலாசிரியர் என்பதாலோ என்னவோ தான் பார்த்தவற்றை, கேட்டவற்றை இயல்பு சிதையாமல் படமாக்க முடிகிறது போலும். தங்கர் பச்சானின் படங்கள் மிகப்பெரிய கொண்டாட்ட மனநிலையை தரக்கூடியவை அல்ல. மூச்சுமுட்டும் வசனங்களால் அரசியல் பேசி கருத்து சொல்லக் கூடியவையும் அல்ல. ஆனால் திரையில் தெறிகிற பன்ருட்டி பலாப்பழத்தின் மணத்தை இதயத்திற்குக் கடத்தக் கூடியவை. அலைகளின் ஆர்ப்பரிப்பற்ற நதியில், தனியொரு படகில் சலனமற்றுப் பயணிப்பதை போன்றது தங்கர் பச்சானின் படங்கள் பார்ப்பது.

இதுதான் சினிமா என்று ரசிகனுக்கு என்னென்னவோ தரப்பட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் அவரது “களவாடிய பொழுதுகள்” வரப்போகிறது. இங்கே கதைசொல்லும் பாணி மாறியிருக்கிறது. திரைமொழி என்பது மாறியிருக்கிறது. கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளுக்கு மேல் கிடப்பில் கிடந்த திரைப்படம், முற்றிலுமாய் மாறிப்போயிருக்கிற இந்த ரசிக சமூகத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறதோ?

ஆனாலும் மாற்றம் என்பது எல்லா காலகட்டத்திலும் நடப்பது தான், அதுதான் நியதியும் கூட. அப்படிப்பட்ட நல்ல மாற்றங்களை ஏற்றுக்கொள்கிற மனப்போக்கு இல்லாமல், தான் எடுப்பது மட்டும் தான் சினிமா என்கிற வகையில் தங்கர் பச்சான் பேசி வருவதை விடுத்து.. “அழகி” போன்ற படத்தை இப்போது கொடுத்தாலும் ரசிகர்கள் அவரை கொண்டாடுவார்கள் நிச்சயமாக.

“களவாடிய பொழுதுகள்” தங்கர் பச்சானுக்கு அழகியாய் அமையட்டும்!!