full screen background image
Search
Sunday 28 April 2024
  • :
  • :
Latest Update

பிரதமர் மோடியைச் சாடிய பிரகாஷ்ராஜ்

கடந்த மாதம் 5-ந்தேதி பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவர் தனது பத்திரிகையில் வலதுசாரி கருத்துக்களை விமர்சித்து எழுதியுள்ளார். இதனால் அவர் மீது ஆர்.எஸ்.எஸ். சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருக்கிறது. அவரது படுகொலைக்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலைக்கு அவரது குடும்ப நண்பரும் நடிகருமான பிரகாஷ்ராஜ் ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தார்.

கெளரி லங்கேஷ் மரணத்தால் சத்தம் அதிகமாகி இருக்கிறது. துப்பாக்கி குண்டுகள் மிரட்டலால் இந்த சத்தத்தை நிறுத்த முடியாது என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் கெளரி கொலை செய்யப்பட்டதை கொண்டாடுவது தொடர்பாக பிரகாஷ்ராஜ் மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடியுள்ளார்.

பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரகாஷ்ராஜ் பேசிய போது, “பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதை சமூக வலைதளங்களில் சிலர் கொண்டாடி வருகிறார்கள். அவர்கள் யார் எங்கு இருக்கிறார்கள்? அவர்களது சித்தாந்தம் என்ன? என்று எல்லோருக்கும் தெரியும். இந்த கொலையை கொண்டாடுவது மிகவும் கொடூரமானது. அவர்கள் பிரதமர் மோடியை தவிர வேறு யாரையும் பின்பற்றாதவர்கள்.

மோடி தனது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து மெளனமாக இருந்து வருகிறார். இதன் மூலம் அவர் என்னை விட மிகப்பெரிய நடிகராக முயற்சித்து வருகிறார் என்பதை நிரூபித்து உள்ளார்.

பிரதமர் இந்த வி‌ஷயத்தில் மெளனமாக இருப்பது எனக்கு கவலை அளிக்கிறது. தனது ஆதரவாளர்களில் சிலர் கொடூரமாக நடப்பதற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் முயற்சி செய்கிறார்.” என்றார்.