நிறம் – திரைவிமர்சனம்
நடிகர்கள் : முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ரானி, தான்யா ஹோப், சுரேகா வாணி, கஜராஜ், நிதின் சத்யா, சுரேஷ் சக்கரவர்த்தி, மற்றும் பலர்.
இசை : டி. இமான்,
ஒளிப்பதிவு :சந்தோணியோ டெரசீயோ,
இயக்கம் : பலராம் கிருஷ்ணா,
தயாரிப்பு : K. பிந்து மாதவி.

கதாநாயகனும் (முகேன் ராவ்) கதாநாயகியும் (ப்ரீத்தி அஸ்ரானி) மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்கள், இருவரும் காதலித்து வருகிறார்கள் பிரீத்தியோ ஒரு சமூகப் பிரச்சினைகளை தனது செல்போனில் வீடியோவை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தட்டிக் கேட்கும் ஒரு தைரியமான பெண்ணாக இருக்கிறார், இப்படி இருக்க ஒரு நாள் தனக்குத் தெரிந்த ஒரு சிறுமியின் மரணம் சந்தேகத்திற்கு உள்ளாகி அந்த மருத்துவ மனையின் நிர்வாகத்தை முறையிடுகிறார் இதனால் அவள் மாயமாகிறாள் அதன் பின்னணி என்னவென்று கதாநாயகன் முயற்சி செய்கிறார் , இது மட்டும் இல்லாமல் நகரத்தில் பல பெண்களும் மாயமாகிறார்கள் கதாநாயகி மாயமானதற்கு சம்பந்தம் இருக்குமா என்று காவல்துறையினர் பல கோணத்தில் விசாரிக்க தொடங்குகின்றனர் .இந்தக் கடத்தலின் பின்னணியில் மருத்துவமனை நிர்வாகம், அதன் அதிகாரிகள், அரசியல் செல்வாக்கு எனப் பல மர்மங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்படுகின்றன. கீர்த்தனாவுக்கு நேர்ந்தது என்ன? மருத்துவமனை நிர்வாகத்திற்கும் இந்தக் குற்றங்களுக்கும் என்ன தொடர்பு? அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் தலைவரின் பங்கு என்ன? இத்தனை மர்மங்களுக்கும் விடை தேடும் பயணமே மீதி கதை.
முகேன் ராவ் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிப்பு சிறப்பு ஆனாலும் கதையின் முக்கியமான தூணாக இருக்க வேண்டும் அவர் அதில் தடுமாற்றம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ப்ரீத்தி அஸ்ரானி துணிச்சலான பெண்ணாகத் தனது கதாபாத்திரத்தைச் சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக, சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அவரது கதாபாத்திர வடிவமைப்பு பாராட்டுக்குரியது.
தான்யா ஹோப் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பொருந்துகிறார். தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.
நிதின் சத்யாவின் நடிப்பு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வில்லத்தனமான கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கும் அவர், தனது உடல்மொழி, பார்வை மற்றும் நடிப்பின் மூலம் மிரட்டுகிறார். வழக்கமான கதாபாத்திரங்களிலிருந்து மாறுபட்டு ஒரு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, எதிர்மறையான கதாபாத்திரங்களிலும் தன்னால் அழுத்தமாகப் பயணிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். தொடர்ந்து இதுபோன்ற வித்தியாசமான வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தால் ரசிகர்களிடையே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.
இசை டி இமானின் பின்னணி இசை படத்திற்கு பலம்,ஆனாலும் பாடல்கள் கவனத்தை ஈர்க்கவில்லை.
ஒளிப்பதிவு சந்தோணியோ டெரசீயோ போதுமான அளவில் தான் அமைந்திருக்கிறது சில காட்சிகளில் நன்றாக முயற்சி செய்திருக்கலாம்.
இயக்குனர் பலராம் கிருஷ்ணா பல சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் கதையின் அடிப்படை சுவாரஸ்யமானது. குறிப்பாக, பெண்கள் தங்களிடம் இருக்கும் ஸ்மார்ட்போனை வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி, சமூகத்தில் நடைபெறும் அநீதிகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் ஆயுதமாகவும் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து கவனிக்கத்தக்கது.அரசியல்வாதி வரும் காட்சிகள் தேவையற்ற ஒன்று. தொடங்கப்பட்ட கதைகள் மாயமான பெண்கள் முடிவு என்னவென்று இல்லாமல் விடப்பட்ட காட்சிகள் சில குறைகள் தான். இருந்தாலும் சமூகப் பிரச்சினை கையில் எடுத்து அவர் சொல்ல வந்த கருத்துக்கு எனது பாராட்டுக்கள்.
மொத்தத்தில் இந்த நிறம் சமூக அக்கறை கொண்ட நிறமாக இருக்கிறது.
