full screen background image
Search
Sunday 28 April 2024
  • :
  • :
Latest Update

நெருப்புடா – விமர்சனம்

விக்ரம்பிரபுவின் முதல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கத்தில், விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, பொன்வண்ணன், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ‘நெருப்புடா’.

உயிரை துச்சமென மதித்து, துணிச்சலுடன் செயல்பட்டு, தீவிபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றும் தீயணைப்பு வீரர்களை பார்த்து, சிறுவயதில் இருந்தே தீயணைப்பு வீரராக வேண்டும் கனவோடு இருந்து வருகிறார்கள் விக்ரம் பிரபுவும், அவரது நான்கு நண்பர்களும். தீயணைப்புத் துறையில் சேர்வதற்கு முன்பாகவே, சொந்தமாக ஒரு தீயணைப்பு வண்டியை வைத்துக் கொண்டு, எங்கெல்லாம் தீ பிடிக்கிறதோ அங்கு சென்று, தீயை அணைத்து, உயிர்களை காப்பாற்றி வருகிறார்கள்.

தீயணைப்புத் துறை நடத்தும் தேர்வுக்கு முன் தினம், அக்கா வீட்டுக்கு சென்று திரும்பும் போது, வம்புக்கும் இழுக்கும் ரவுடி வின்சென்ட் அசோகனை கீழே தள்ளி விடுகிறார் விக்ரம்பிரபுவின் நண்பரில் ஒருவரான வருண். அப்போது எதிர்பாராத விதமாக வின்சென்ட் அசோகன் இறந்து விடுகிறார்.

இதிலிருந்து விடுபட விக்ரம்பிரபு மற்றும் நண்பர்கள் ஏரியா கவுன்சிலர் மொட்டை ராஜேந்திரனின் உதவியை நாடும் போது தான், இறந்தவர் ஊரிலேயே பெரிய தாதாவாக இருக்கும் மதுசூதனனின் நண்பர் என்று தெரியவருகிறது. இதையறிந்த மொட்டை ராஜேந்திரன் உதவி செய்ய மறுக்கிறார்.

நண்பனின் மரணத்திற்கு பழி தீர்க்க புறப்படும் மதுசூதனனிடம், ஒரு கட்டத்தில் வின்சென்ட் அசோகன் இறப்புக்கு காரணமாக தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார் விக்ரம் பிரபு. இறுதியில், மதுசூதனனிடம் இருந்து விக்ரம்பிரபும் அவரது நண்பர்களும் தப்பித்தார்களா? விக்ரம் பிரபுவின் லட்சியம் நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.

தீயணைப்பு வீரர் ஆகி உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடனும் இருக்கும் கதாபாத்திரத்தைத் தாங்கி நடித்திருக்கிறார் விக்ரம் பிரபு. ரவுடியுடன் முறைப்பது, நிக்கி கல்ராணியுடன் காதல் செய்வது என நடிப்பில் முதிர்ச்சி பெற்றிருக்கிறார். மருத்துவக் கல்லூரி மாணவியாக வரும் நிக்கி கல்ராணி, துறுதுறு பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்கிறார்.

வழக்கம்போல் தன்னுடைய வில்லத்தனத்தால் மிரட்டி இருக்கிறார் மதுசூதனன். அப்பா பாசத்தை உணர்த்தும் விதமாக அழகாக நடித்து மனதில் பதிந்திருக்கிறார் பொன்வண்ணன். மொட்டை ராஜேந்திரனின் காமெடி ஓரளவிற்கு கைகொடுத்திருக்கிறது. கொடுத்த வேலையை அவரவர் பங்கிற்கு சிறப்பாக செய்திருக்கிறார்கள் வருணும், அவருடன் இருக்கும் நண்பர்களும்.

ஒரு தீயணைப்பு வீரர் எப்படி இருக்க வேண்டும் என்பற்கு ஏற்ப திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் அசோக் குமார். முதல் காட்சியில் இருந்த பரபரப்பும், விறுவிறுப்பும், உணர்வுப்பூர்வமான காட்சிகளும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கின்றன. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, காட்சிக்கு காட்சி திருப்பங்களுடன் யூகிக்க முடியாத அளவிற்கு படம் செல்கிறது. யாரும் எதிர்ப்பார்க்காத கிளைமாக்ஸ் கொடுத்திருப்பது சிறப்பு.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ஆலங்கிளியே பாடல் மனதில் அழுத்தமாய் பதிகிறது. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு காட்சிகளின் தன்மையை அழகாக காட்டியிருக்கிறது.

சினிமாவின் பார்வையில் ‘நெருப்புடா’ – மனதில் பற்றுகிறது.