full screen background image
Search
Saturday 4 May 2024
  • :
  • :
Latest Update

2022-க்குள் புதிய இந்தியாவை உருவாக்க வாருங்கள்: பிரதமர் மோடி அழைப்பு

8-8-1942 அன்று பம்பாய் நகரில் (தற்போதைய மும்பையில்) கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ’வெள்ளையனே வெளியேறு’ (Quit India) என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.

அன்று மாலை பம்பாயில் உள்ள கோவாலிய டேங்க் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மகாத்மா காந்தி, வன்முறை தவிர்த்து ஒத்துழையாமை செய்ததைப் போல, வெள்ளையனே வெளியேறு போராட்டமும் அமைதியான அறவழியில் நடைபெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

எனினும், காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். புனேவில் உள்ள ஆகா கான் அரண்மனையில் காந்தி சிறை வைக்கப்பட்டார். ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்கள் குஜராத்தில் உள்ள அகமது நகர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.

ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை பம்பாய் மாநாட்டிற்கு 3 லட்சம் பேர் திரண்டனர். அமைதியாக நடந்த போராட்டத்தின் மீது தடியடி நடத்தப்பட்டது. பிறகு கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.

இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் அன்று தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரிட்டிஷ் காவல்துறை தடியடி நடத்தியது. சில இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பலர் உயிரிழந்தனர். இதனால் வெள்ளையர்களின் சர்வாதிகாரம் மற்றும் அடக்குமுறைக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்தது.

இந்நிலையில், வெள்ளையனே வெளியேறு (Quit India) போராட்டத்தின் 75-வது நினைவுதினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

’வரலாற்று சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-வது ஆண்டு நினைவுதினமான இன்று அதில் பங்கேற்ற பெருமதிப்புக்குரியவர்களுக்கு தலை வணங்குகிறேன். ’சாதிப்போம்’ என்ற சபதத்துடன் நாம் அனைவரும் தோளோடுதோள் இணைந்து நமது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெருமைப்படும் வகையில் நாட்டை உயர்த்த நாம் பாடுபட வேண்டும்.

வறுமை, அசுத்தம், ஊழல், பயங்கரவாதம், வகுப்புவாதம் மற்றும் மதவாதத்தில் இருந்து இந்தியாவை விடுவித்து 2022-ம் ஆண்டுக்குள் நமது கனவான ‘புதிய இந்தியாவை, உருவாக்க இன்று உறுதி ஏற்போம்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.