மகுடம் திரைவிமர்சனம்
நடிகர்கள் :விஷால்,துஷாரா விஜயன், அஞ்சலி,தம்பி ராமய்யா,ஜான் விஜய், ஜெயபிரகாஷ்,மற்றும் பலர்.
இசை :ஜி. வி. பிரகாஷ் குமார்,
ஒளிப்பதிவு :ரிச்சர்ட் எம். நாதன் மற்றும் அபிநந்தன் ராமானுஜம்
இயக்கம் :விஷால்,
தயாரிப்பு :சூப்பர் குட் பிலிம்ஸ்

மகுடம்’ சாதாரணமான பழிவாங்கும் கதை அல்ல. கடலோர சரக்கு மற்றும் கப்பல் வணிகத்தின் பின்னணியில் பணம், அதிகாரம், பழைய பகை, குடும்ப உறவு, வன்முறை என பல விஷயங்களை ஒரே கதைக்குள் கொண்டுவர முயற்சிக்கிறது. பிரச்சினை என்னவென்றால், இத்தனை விஷயங்களை ஒன்றாகச் சொல்ல முயன்ற திரைப்படம், இறுதியில் எதை அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என்பதில் தடுமாறுகிறது.
விஷால் கிருபாகரன், லிங்கா என வெவ்வேறு பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரங்களில் தோன்றுகிறார். குறிப்பாக வயதான லிங்கா கதாபாத்திரத்தில் அவரது உடல்மொழியும் நடிப்பும் கவனத்தை ஈர்க்கின்றன. நீண்ட கால வன்முறையையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் கடந்து வந்த மனிதனின் பாரத்தை அவரது நடிப்பு சில காட்சிகளில் நன்றாக வெளிப்படுத்துகிறது.
விஷாலின் நடிப்பு . இளம் வயது லிங்கா கதாபாத்திரம் விஷாலுக்கு புதிதல்ல. அதிரடி, ஆக்ரோஷம், பஞ்ச், சண்டை என அவரது வழக்கமான திரை பாணி இங்கும் தொடர்கிறது. அதனால் அந்தப் பகுதிகளில் ஆச்சரியம் குறைகிறது.
குடும்ப உணர்வுகளை முன்னிறுத்தும் காட்சிகளில்தான் படம் தடுமாறுகிறது. கதாபாத்திரங்களின் உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்வதற்கான நேரமும் வலிமையான எழுத்தும் இல்லாததால், சில காட்சிகள் பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தாமல் கடந்து செல்கின்றன.
துஷாரா விஜயன் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார். குறைந்த நேரத்திலேயே தனது கதாபாத்திரத்திற்கு தேவையான தீவிரத்தை கொண்டு வருகிறார்.
அஞ்சலி கதாபாத்திரத்திலும் இயல்பான நடிப்பை வழங்குகிறார். விஷாலுடன் மீண்டும் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், திரைக்கதை அவரது கதாபாத்திரத்தை முழுமையாக பயன்படுத்தத் தவறுகிறது. ஜான் விஜய், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை நம்பகத்தன்மையுடன் செய்திருக்கிறார்கள்.
ரிச்சர்ட் எம். நாதன் மற்றும் அபிநந்தன் ராமானுஜம் ஆகியோரின் ஒளிப்பதிவு படத்திற்கு இயல்பான, அழுத்தமான தோற்றத்தை வழங்குகிறது. துறைமுகம், கடலோரப் பகுதிகள், சரக்கு கப்பல் உலகம் ஆகியவை கதையின் பின்னணியாக நம்பகமாகப் பதிவாகியுள்ளன.
ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசை படத்தின் முக்கியமான பலங்களில் ஒன்று. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் இசை காட்சியின் தாக்கத்தை உயர்த்துகிறது.
திரைப்படத்தின் நீளத்தை குறைந்தியிருக்கலாம் தேவைக்கு அதிகமாக நீளும் காட்சிகள், மெதுவாக நகரும் பகுதிகள் ஆகியவை படத்தின் வேகத்தை பாதிக்கின்றன.
ஒரு நடிகராக விஷாலிடம் இருக்கும் ஆற்றலை ஒரு இயக்குநராக மாற்றும்போது, சண்டைக் காட்சிகளுக்கும் பிரம்மாண்டத்திற்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் போதாது. கதையின் ஒவ்வொரு பகுதியும் அடுத்த பகுதிக்கு ஏன் செல்கிறது என்பதையும், பார்வையாளன் ஏன் அந்தப் பயணத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
மொத்தத்தில் இந்த மகுடம் முடி சூடாத மகுடம்
