மகாமுனி’ விமர்சனம் (Rating 3.8 / 5)

Reviews

மெளனகுரு படத்திற்கு பிறகு சுமார் 9 ஆண்டுகளுக்கு பின் ‘மகாமுனி’யை இயக்கியுள்ளார் இயக்குனர் சாந்தகுமார்.

இவரின் பொறுமையான படைப்புறுவாக்கத்திற்கே இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்பது முதல்காரணம்.

சில படங்களில் யார்யா இந்த ஆர்யா? என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு அசரடித்த நடிகர் ஆர்யா இந்தப்படத்தில் மீண்டு (நடிகராக )வந்திருக்கிறார் என்பது தகவலாக பரவி வருகிறது. இதுதான் இப்படத்தைக் காணவேண்டும் என்பதற்கான இரண்டாவது காரணம்

ஆர்யா இரண்டு கதாபாத்திரங்களில் தோன்றுகிறார்.

ஒரு கதாபாத்திரமான மகா, கால் டாக்சி டிரைவராக காஞ்சிபுரத்தில் தனது மனைவி, மகன்(6 வயது) உடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது, லோக்கல் அரசியல்வாதி இளவரசுக்காக சிலரை கொலை செய்ய திட்டம் (Sketch) போட்டு கொடுக்கும் வேலையும் பார்த்து வருபவர் இந்த மகா.

மற்றொரு கதாபாத்திரமான முனி, கரூர் மாவட்டத்தில் தனது தாயுடன் வாழ்ந்து வருபவர். டிகிரி படிப்பை முடித்துக் கொண்டு விவசாயமும், சேவையும்,சுவாமி விவேகானந்தர் வழியில் துறவி வாழ்க்கையையும் மேற்கொள்ள நினைக்கும் தூய மனசுக்கு சொந்தகாரர்.

மகாவின்(ஆர்யா) திட்டத்தால் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மகாவை கொலை செய்ய முயல்கின்றனர்.

அதில் மகாவின் குடும்பமும், முனியின் வாழ்க்கையும் எப்படி திசை மாறி சென்றது என்பதே படத்தின் மீதிக் கதை.

 

மகா மற்றும் முனி  என்ற இரண்டு கதாபாத்திரங்களிலும் ஆர்யா மிகக் கச்சிதமாக தனது கதாபாத்திரத்தை ஏற்று நடித்து, அதில் பாராட்டையும் பெற்றிருக்கிறார். படம் ஆரம்பிக்கும் 10வது நிமிடத்திலேயே ஹாஸ்பிட்டல் காட்சி ஒன்று வரும், அதில் ஆர்யாவின் ஒட்டுமொத்த திறமையையும் பார்த்துவிடலாம்.

நான் கடவுள் படத்திற்கு பிறகு ஒரு படத்தில் ஆர்யா வாழ்ந்திருக்கிறார் என்றால் அது நிச்சயம் ‘மகாமுனி’யாக தான் இருக்கும். இப்படத்திற்கு பிறகு, கதை தேர்வில் ஆர்யா கவனம் செலுத்துவார் என்று நம்புவோம்.

முனி கதாபாத்திரத்தை சுற்றி பயணம் செய்யும், மஹிமா நம்பியார் மிகவும் வித்தியாசமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது கண்களின் மிரட்டல், துணிச்சலான ஒரு நடை, ஸ்டைல் என அனைத்திலும் தனது மிரட்டலான நடிப்பைக் கொடுத்து மிரட்டியிருக்கிறார்.

மகாவின் மனைவியாக வரும் இந்துஜாவும் இப்படத்தில் சற்று வித்தியாசமான நடிப்பை கொடுத்திருக்கிறார். தனது கணவனை எண்ணி அழும் ஒவ்வொரு காட்சியிலும் நம் கண்களிலும் கண்ணீரை வர வைக்கும் அளவிற்கு நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், இளவரசு, ஜெயபிரகாஷ், ரோகிணி, அருள்தாஸ், மதன்குமார், காளிவெங்கட், GM சுந்தர், தீபா, கலக்கப்போவது யாரு யோகி என அனைவரும் தங்களது கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள்.

 

ஜாதி குறித்தும், மனிதனின் மனநிலை குறித்தும், ஆங்காங்கே வரும் வாள் வீசும் வசனங்கள் அனைத்திற்கும் தியேட்டரில் கைதட்டல்கள் விண்ணை முட்டும்.

எஸ் எஸ் தமனின் இசையில் ஒரு பாடல் கேட்கும் ரகம். பின்னனி இசையில் வரும் படத்தின் தீம் இசை மிரட்டல்.

அருள் பத்மநாபனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம். காட்சிகள் ஒவ்வொன்றிற்கும் கொடுத்த மெனக்கெடல் அழகு.

சாபு ஜோசப்பின் படத்தொகுப்பு ஷார்ப். கலை – ரெம்போம் பால்ராஜ். ஆக்‌ஷன் பிரகாஷின் ஆக்‌ஷன் காட்சிகள் அனைத்தும் அதிரடி தான்.

மகாமுனி – மகாமுனியின் ஆட்டத்தை கூர்ந்து பார்த்தால் மட்டுமே கொண்டாட முடியும்…. ( மொத்தத்தில் உலக தரத்தில் ஒரு தமிழ் சினிமா)