full screen background image
Search
Monday 6 May 2024
  • :
  • :
Latest Update

லியோ திரைப்பட விமர்சனம்

லியோ திரைப்பட விமர்சனம்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான இந்த லியோ திரைப்படம் LCU-வா, LCU-வா என்று படப்பிடிப்பு தொடங்கப்பட்டதில் இருந்தே சந்தேகம் நீடித்து வந்தது‌. அதற்கெல்லாம் பதில் கிடைக்கும்படி லியோ திரைப்படம் வெளியாகி அதற்கு முடிவு கட்டி இருக்கிறது. ஆமாம், இந்த படம் LCU-வில் இணைகிறது. ஆனால் வேண்டுமென்றே திணித்தபடி இருந்தது. 

 

ஒரு படம் பார்க்க, ரசிகர்கள் திரையரங்குகளுக்கு செல்கிறார்கள் என்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்புகள் இருக்கும். அப்படி அனைவரின் எதிர்பார்ப்பையும் இந்த லியோ பூர்த்தி செய்தததா? என்று கேட்டால், இல்லை என்று தான் கூற முடிகிறது. 

 

அப்படி கதை தான் என்ன? என்று பார்த்தால் 2005-ல் A History of Violence என்று ஒரு திரைப்படம் வெளியானது. அந்த படத்தின் அப்பட்டமான காபி தான் என்று லியோ டிரெய்லர் வெளியான சமயத்திலேயே தகவல் பரவியது. அது முற்றிலும் உண்மை என்பது தற்போது லியோ வெளியீட்டின் மூலம் நிரூபணமானது. A History of Violence படத்தை அங்காங்கே சிறிது பட்டி-டிங்கரிங் செய்தி, அதை இந்த LCU-வுக்குள் திணித்து மேன்மேலும் மெருகேற்றி லியோ என்ற விருந்து படைத்து, மொத்தமாக வாந்தி எடுக்க வைத்துள்ளனர். 

 

சரி, இப்போது லியோ படத்தின் கதைக்கு வருவோம். “இமாச்சலப் பிரதேசத்தில் பேக்கரி கடை வைத்திருக்கும் பார்த்திபன் (விஜய்), தனது மனைவி (திரிஷா) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் கூலிப்படையால் பார்த்திபனின் கடையில் பிரச்சனை நடக்க, அதை எப்படி கையாள்வது என்று தெரியாமல் கூலிப்படைகள் அனைவரையும் சுட்டுக் கொன்றுவிடுகிறார் பார்த்திபன். 

 

அதன் பிறகு அந்த கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் பார்த்திபனின் குடும்பத்தை பழிவாங்க துடிக்கின்றனர். ஒரு பக்கம் பார்த்திபனுக்கு இப்படி ஒரு பிரச்சனை நீடிக்க, மறுபக்கம் இவர்தான் லியோ என்று நினைத்து அவரை பிடிக்க Dass Group சுற்றித் திரிகிறது.

 

ஒரு குடும்பத் தலைவனாக இதை பார்த்திபன் எப்படி கையாண்டார்? இவர்தான் லியோவா? போன்ற பல்வேறு விதமான முடிச்சுகள் கதை நகர, நகர அடுத்தடுத்து அவிழ்க்கப்படுகின்றன. இப்படி இந்த 2 Group-யிடம் இருந்தும் பார்த்திபனும் அவரது குடும்பமும் தப்பித்ததா? என்பதே மீதிக்கதை…. இந்த கதை எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கல்லவா…? ஆமாம், ஆரம்பத்திலேயே கூறியது போல, A History of Violence படமே தான்.

 

படத்தில் எண்ணற்ற நடிகர்கள்…. திரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மாத்யூ தாமஸ், சாண்டி, மிஷ்கின் தொடங்கி, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான் வரை அடுத்தடுத்து சிறு சிறு கதாபாத்திரங்களிலும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். 60 விநாடிக்குள் ஒருவனை கொல்வதற்கெல்லாம் ஒரு சிறப்புத் தோற்றமா? என்று பொறுமையை சோதிக்கிறது. அனைவருக்கும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் முக்கியமானதா என்று பார்த்தால், சிறப்பு தோற்றத்தில் வருபவர்களே தேவை இல்லாத ஆணி தான்…

 

எல்லோரும் எதிர்பார்த்ததே லோகேஷின் திரைக்கதைக்காகத்தான்… ஆனால் அதிலும் அவர் கோட்டை விட்டு விட்டாரோ என்ற ஐயம் எழுகிறது. அவ்வளவு பெரிய நடிகரான கமலை வைத்தே விக்ரம் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்து விட்டோம், இவர்களுக்கெல்லாம் என்ன? என்பது போல மம்மதை உருவானதோ… என்னவோ? போதைப்பொருளை ஒழிக்கத்தான் கதை எடுக்கிறேன் என்று கூறி, அந்த கதையிலேயே பள்ளிப்பருவ மகன் சிகரெட் பிடிப்பதை அப்பா ஒப்புக்கொள்வது போல கதை எடுத்தால் நியாயமா? 

 

படத்தோடு ஒன்றிப்போக முடியாத அளவில், தேவையில்லாத திணிப்புகள் ஏராளம். ஆரம்பத்தில் கழுதைப்புலி (Hyena), விஜய்-திரிஷாவுக்கான முத்தக்காட்சி, விஜய்யின் Hairstyle, கூலிப்படை, கார் chasing என்று அடுத்தடுத்து நிறைய காட்சிகள் படத்துக்கு தேவையே இல்லை. ‘மூடநம்பிக்கையால் ஒரு குடும்பம் எப்படி சீரழிகிறது, அதனால் ஒரு கெட்டவன் எப்படி நல்லவன் ஆகிறான்’ என்பதே கதையின் கருவாக இருக்கிறது.

 

14 ஆண்டுகளுக்கு பின் இணைந்து நடித்த விஜய்-திரிஷாவின் Chemistry நன்றாக இருந்தது. முக்கியமாக படத்தின் cinematography அருமை. சண்டைக்காட்சிகள் உருவாக்கம் நேர்த்தி. Flashback Portion-ல் வரும் விஜய், நான் ரெடி பாடல் அற்புதம். அனிரூத்தின் பின்னணி இசை பிரம்மாதம். இதுவரை பார்த்திராத சாண்டி மாஸ்டரின் வித்தியாசமான கதாபாத்திரம், அர்ஜுனின் Harold Dass கதாபாத்திரம் Top Notch. இதையெல்லாம் தாண்டி முன்னணி ஹீரோவுக்கான ஒரு மாஸ் என்ட்ரி, பஞ்ச் டயலாக் என எதுவுமின்றி ஒரு குடும்பத்தின் தலைவனாக விஜய் சிறப்பாகவே நடித்துள்ளார். திருமலை, துப்பாக்கி, மெர்சல் என முந்தைய படங்களில் உள்ள விஜய்யின் Swag-யை recreate செய்தது சூப்பர். 

 

ஆஹா, ஓஹோ என்று ஆர்ப்பரிக்காமல், இது விஜய் படம், லோகேஷ் கனகராஜ் இயக்கம், LCU என்ற எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்தை பார்ப்பவர்களுக்கு லியோ திருப்தி அளிக்கலாம். குறிப்பாக விஜய் ரசிகர்கள் கொண்டாடலாம். ஆனால் சாமானிய மக்களை இந்த லியோ திருப்திபடுத்துவாரா என்றால் சந்தேகம்தான்….