full screen background image
Search
Sunday 5 May 2024
  • :
  • :
Latest Update

லால் சலாம் திரைப்பட விமர்சனம்!

லால் சலாம் திரைப்பட விமர்சனம்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள படம் லால் சலாம். மத நல்லிணக்கம் பற்றி பேசும் இப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். ரஜினியும் லிவிங்ஸ்டனும் சிறு வயது முதலே நல்ல நண்பர்கள். இருவரும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் உயிர் நண்பர்களாக பழகி வருகின்றனர். அதேபோல் தான் அவர்களின் ஊர் மக்களும் நட்பாக பழகி வருகின்றனர். அந்த ஊரில் ரஜினி தொடங்கும் கிரிக்கெட் அணிதான் 3 ஸ்டார். அதில் லிவிங்ஸ்டனின் மகன் விஷ்ணு விஷால் விளையாடி வருகிறார். அவர் அந்த அணியில் இருந்து விலகி வேறொரு அணியில் விளையாடுகிறார். அந்த அணி வீழ்த்த முடியாது அணியாக மாறிவிடுகிறது. இதனால் மும்பையில் உள்ள ரஜினியின் மகன் விக்ராந்தை அழைத்து வந்து விளையாட வைக்கின்றனர். விக்ராந்துக்கு இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பதே ஆசை. ரஜினிக்கும் அதுவே ஆசை. சிறு வயதில் இருந்தே விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவருக்கும் ஆகாது. அடிக்கடி சண்டையிட்டு கொள்கின்றனர். இந்த நிலையில் மீண்டும் இருவரும் கிரிக்கெட் மைதானத்தில் மோதிக்கொள்ளும் சூழல் வருகிறது. சிலர் இவர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். இறுதியில் இருவருக்கும் என்ன ஆனது? அவர்களின் அரசியல் ஆதாயம் நிறைவேறியதா? என்பதை சொல்லும் படம்தான் லால் சலாம்.

படத்தின்‌ மிகப் பெரிய பலம் ரஜினிகாந்த். ஆனால் அதுவே பலவீனமும். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நல்ல கதையை தேர்வு செய்துள்ளார். ஆனால் திரைக்கதையில் கொஞ்சம் சொதப்பி விட்டார். முதல் பாதியில் கதை எங்கெங்கோ செல்கிறது. இரண்டாம் பாதியில் தாம் சொல்ல வந்ததை சிறப்பாக சொல்லிவிட்டார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். விக்ராந்துக்கு இப்படம் நல்லதொரு அடையாளத்தை கொடுக்கும் என்று நம்பலாம். அதேபோல் அம்மாவாக நடித்துள்ள ஜீவிதா அற்புதமாக நடித்துள்ளார். மேலும் தம்பி ராமையா, செந்தில் , தங்கதுரை, திவாகர் என ஒவ்வொரு கதாபாத்திரமும் கொடுத்த வேலையை நன்றாக செய்துள்ளனர்.

ரஜினிகாந்த் வழக்கமான தனது ஸ்டைலில் ரசிக்க வைக்கிறார். முதல் பாதியில் சிறிது நேரமே வந்தாலும் இரண்டாம் பாதியில் கலக்கியுள்ளார். மத நல்லிணக்கம் பற்றி அவர் பேசும் வசனங்கள் நன்றாக இருந்தாலும் அவர் பேசுவதை சிலர் ஏற்றுக்கொள்வார்களா என்பதுதான் கேள்வி. கடவுள் பெயர்‌ வேறு வேறாக இருந்தாலும் எல்லா மதத்திலும் கடவுள் ஒன்றுதான் என்கிறது இந்த லால் சலாம். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் நன்றாக உள்ளது. ஏஆர் ரகுமான் இசையில் பாடல்கள் அருமை. ஆனால் பின்னணி இசை சொதப்பல். கோவில் திருவிழா எதற்காக கொண்டாடுகிறார்கள் என்று செந்தில் பேசும் காட்சி நெகிழ்வான ஒன்று. கிரிக்கெட்டில் அரசியல் நுழைந்தால் என்னவாகும் மதத்தை வைத்து நடக்கும் அரசியல் அதனால் சீரழியும் இளைஞர்கள் என நல்ல கருத்தை பதிவு செய்துள்ளார் இயக்குனர் ஐஸ்வர்யா. ஆனாலும் இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லி இருக்கலாம். கிளைமாக்ஸ் சிறப்பு. மொத்தத்தில் லால் சலாம் – அனைவரும் சமம். ரேட்டிங் 3.5/5