full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

கேரளாவில் பந்த் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்ப தினமும் மாற்றியமைத்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏறுமுகமாக உள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசிய எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் இவற்றின் மீதான வரிகளை குறைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து உற்பத்தி வரியை குறைக்கும்படி நிதி அமைச்சகத்தை எண்ணெய் அமைச்சகம் கேட்டுக் கொண்டு உள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் இன்று வாகனங்கள் வேலைநிறுத்தம் தொடங்கி நடைபெற்று வருகிறது. வர்த்தக யூனியன்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள் உட்பட பெரும்பாலான வாகனங்கள் இயக்கப்படவில்லை. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இதனால் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில போக்குவரத்து கழக சங்கங்களும் இந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அரசு பேருந்துகளும் இயங்கவில்லை. இதனால், பயணிகள் கடும் பாதிப்படைந்தனர்.

எனினும், ஆர்.எஸ்.எஸ் ஆதரவு நிலைப்பாடு கொண்ட பாரதீய மஸ்தூர் சங்கம் போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்கவில்லை. தனியார் பேருந்துகளும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன. ஆம்புலன்ஸ் மற்றும் தனிநபர் வாகனங்களுக்கு நாங்கள் இடையூறு செய்ய மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர், கேரளாவில், இன்று நடைபெற இருந்த தேர்வுகளையும் தள்ளி வைப்பதாக பல்வேறு பல்கலைக்கழங்களும் அறிவித்துள்ளன.

இதற்கிடையே, எரிபொருள் விலை உயர்வை கண்டித்தும், டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி அறிவிக்க கோரியும் கேரளாவில் தனியார் பேருந்துகள் வரும் ஜனவரி 30 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.