full screen background image
Search
Sunday 28 April 2024
  • :
  • :
Latest Update

ஜூலி 2- விமர்சனம்

“ஆமாங்க, இங்கே பாலியல் தொல்லை இருக்குங்க” என்று முன்னாள் நடிகைகளும், இந்நாள் நடிகைகளும் குற்றச்சாட்டுகளை அவ்வப்போது சொல்வார்கள். அது வெறும் பரபரப்புச் செய்தியாகி, இரண்டொரு நாளில் காணாமல் போகும். இந்தத் தொல்லைகள் என்பது எல்லா விதமான பணியிடங்களிலுமே பெண்கள் அனுபவிப்பது தான் என்றாலும், குறிப்பாக திரைத்துறையில் பெண்ணாக இருந்து சாதிப்பதென்பது எந்தளவிற்கு சவாலானது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அப்படி ஆண் துணையில்லாமல் சினிமாவில் அறிமுகமாகி சிக்கல்களை சந்திக்கிற ஒரு சாதாரண பெண்ணின் கதை தான் “ஜூலி2”. கிட்டத்தட்ட சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட “தி டர்ட்டி ஸ்டோரி” படம் போலவே தான் இந்தப் படமும் எடுக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் இந்த கதைக்குள் ஒரு த்ரில்லர் போர்ஷனை வைத்து, திரைக்கதையை கொஞ்சம் பரபரப்பாக நகர்த்தியிருப்பதின் மூலம் படம் பிழைத்துக்கொள்கிறது.

பொதுவாகவே, நடிகைகள் தனித்து முன்னேறுவதற்கு தங்களது உடலையே மூல தனமாகப் பயன்படுத்துகிறார்கள் என்கிற பாமரத் தனமான சிந்தனைக்கு இந்தப் படம் மேலும் வலு சேர்த்திருக்கிறது. இங்கே ஒரு நடிகனை தங்கள் தலைவனாக, குடும்பத்தில் ஒருவனாக பார்க்கிற ரசிகன்.. ஒரு நடிகையை எந்த மாதிரியான கண்ணோட்டத்தில் பார்க்கிறான்? என்பதிலிருந்து நாம் ஜூலியின் நியாயங்களை உணர முடியும்.

ஜூலி ஒவ்வோரு முறை ஒவ்வொரு ஆளுமைகளிடம் ஏமாறும் போதெல்லாம், அந்த ஏமாற்றத்தைப் பிரதிபலிக்கிற ராய் லக்ஷ்மியின் நடிப்பு இதுவரையும் நாம் அவரிடம் கண்டிராதது. படம் நெடுக வருகிற கவர்ச்சிக் காட்சிகளே படத்திற்கு வேறு மாதிரியான வடிவத்தைத் தந்திருக்கிறது. இல்லையேல் “ஜூலி” நிச்சயமாய் நம்மைக் கலங்க வைக்கிற பெண்ணாக வந்திருப்பாள்.

எதை இந்த சமூகம் பெண்ணின் பலவீனமாக்கி அடிமைப்படுத்துகிறதோ, அதையே பலமாக மாற்றிகொண்டு வெற்றி பெறும் பெண்ணாக ஜூலி இருக்கிறாள். ஆனால் அவளின் அன்பிற்கு ஏங்கும் மனம் குறித்த எந்த கவலையும் யாருக்கும் இல்லாத சூழலில் அவள் எடுக்கிற முடிவுகளை, இந்த பெரும்பான்மை சமூகம் சரியென்று ஏற்றுக்கொள்ள இன்னும் ஒரு யுகம் தேவைப்படும். அதுவரையில் ஜூலி2 மாதிரியான படங்கள் கிளுகிளுப்பு வரிசையிலேயே சேர்க்கப்படும்.

வழக்கமான டப்பிங் படங்களில் உள்ளது போல் “நான்சிங்” பிரச்சனை இல்லாமல் இருப்பது கொஞ்சம் நிம்மதி. பாடல்கள் சோதனை.

கவர்ச்சிக் காட்சிகளைக் குறைத்து விட்டு, காட்சிகளை அழுத்தமானதாக்கி இருந்தால் படம் சிறப்பானதாக வந்திருக்கும். இயக்குநர் கதையை விட, கவர்ச்சிக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது அப்பட்டமாய்த் தெரிவதால் மிக சாதாரணமான “பி கிரேடு” படம் போலவே கடந்து போக நேரிடுகிறது இந்த “ஜூலி2”வை.

இன்னும் அழுத்தமான கனமான காட்சிகளை வைத்திருந்தால் நிச்சயமாக ஜூலி2 எல்லோருக்குமான படமாக அமைந்திருக்கும். அந்த வகையில் கொஞ்சம் ஏமாற்றம் தான்!