full screen background image
Search
Sunday 19 May 2024
  • :
  • :
Latest Update

வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் நிறுவனத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜவான்’ திரைப்படத்தின் பிரதியை சட்ட விரோதமாக பகிர்ந்தவர்களின் அடையாளத்தை வெளியிடுமாறு வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் நிறுவனத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜவான் திரைப்படத்தை தயாரித்த ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் – மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜவான் திரைப்படத்தின் திருட்டுப் பிரதியை வாட்ஸ் அப் குழுக்கள் மற்றும் டெலிகிராம் சேனல்கள் ஆகியவற்றில் சட்ட விரோதமாக பகிர்வதை உடனடியாக நிறுத்திட வேண்டும் என்றும், அதனை செயலிழக்க செய்ய வேண்டும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று கோரிக்கை விடுத்தது.

வாட்ஸ் அப், டெலிகிராம் மற்றும் மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்களான ஏர்டெல், ஐடியா- வோடாஃபோன், ரிலையன்ஸ் -ஜியோ மற்றும் பி எஸ் என் எல் ஆகியவை இந்த கணக்குகளை இயக்கும் தொலைபேசி எண்களின் சந்தாதாரரின் தகவல்களையும், பயனர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டும் என்றும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தனது விண்ணப்பத்தில் அடையாளம் காணப்பட்ட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள நபர்களால் இயக்கப்படும் குழுக்களை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனமாகத் திகழும் ‘மெட்டா பிளாட்பார்ம்ஸ் இன்க்’ எனும் நிறுவனத்திற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதீப் நிமானி பேசுகையில், ” பைரசி என்பது எங்கள் தொழில்துறையை பாதிக்கும் பெரிய பிரச்சனையாகும். அதை எதிர்த்து போராடுவதற்காக வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் சேனல்களில் படத்தின் திருட்டுப் பிரதிகளை தேடும் பயனர்களாக செயல்படும் பல திருட்டு எதிர்ப்பு ஏஜென்சிகள் மற்றும் முகவர்களை நாங்கள் நியமித்துள்ளோம். இது தொடர்பாக சமூக ஊடக வலைதளங்கள் குறித்தும் மற்றும் பைரசி குறித்தும் புகாரளித்துள்ளோம். இந்நிலையில் ரோஹித் சர்மா என்ற ஒரு நபரை அடையாளம் காண உதவியது. மேலும் பலரும் இப்படத்தின் திருட்டு பிரதிகளை சட்ட விரோதமாக பகிர்கிறார்கள்.

படத்தின் பிரதியை சட்டவிரோதமாக பகிர்ந்து பரப்பிய ரோஹித் சர்மா மற்றும் பிற நபர்களுக்கு எதிராக ரெட் சில்லிஸ் நிறுவனம் மும்பையில் உள்ள சாண்டா குரூஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறது. எதிர்வரும் நாட்களில் போலீசார் இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள். மேலும் இந்த நீதிமன்ற உத்தரவின் படி அடையாளம் காணப்பட்ட நபர்கள் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகம்.

ரெட் சில்லிஸ் நிறுவனத்தால் அடையாளம் காணப்பட்ட ரோஹித் சர்மாவுக்கு எதிராக நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அவர் வாட்ஸ் அப் மூலம் படத்தின் பிரதிகளை அற்ப தொகைக்கு சட்ட விரோதமாக விற்றிருக்கிறார். அவரது வாட்ஸ் அப் எண்ணை செயலிழக்கச் செய்யவும், அவரது வாட்ஸ் அப் குழு மற்றும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை நீக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஏனைய வாட்ஸ் அப் குழுக்கள் மற்றும் டெலிகிராம் சேனல்களின் அட்மின்கள் அடையாளம் காணப்பட்டவுடன்… அவர்கள் மீதும் இதே போன்ற நடவடிக்கை தொடர வாய்ப்புள்ளது.

ரெட் சில்லிஸ் நிறுவனம் தாக்கல் செய்த ‘ஜான் டோ’ வழக்கில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்ட உத்தரவை தொடர்ந்து, டெல்லி உயர் நீதிமன்றம் படத்தின் திருட்டு பிரதிகளை ஹோஸ்ட் செய்வதாக கண்டறியப்பட்ட விண்ணப்பத்தில் அடையாளம் காணப்பட்ட சில கூடுதலான இணையதளங்களையும் நீக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது.” என்றார்.

ரெட் சில்லிஸ் நிறுவனம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ராஜசேகர் ராவ் மற்றும் வழக்கறிஞர் நிஜாம் பாஷா மற்றும் டி எஸ் கே எனும் சட்ட குழுமத்தை சேர்ந்த சந்திரிமா மித்ரா மற்றும் பராக் கந்தர் ஆகியோர் ஆஜராகினர்.