full screen background image
Search
Thursday 2 May 2024
  • :
  • :
Latest Update

மத்திய அரசிடம் சிபாரிசு செய்வேன் : சந்திரபாபு நாயுடு

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்த பாகுபலி-2 படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 9 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் வசூலில் எந்த இந்திய படமும் செய்யாத சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

அதிக வசூல் ஈட்டிய படங்கள் பட்டியலில் இருந்த தங்கல், சுல்தான் ஆகிய இரண்டு இந்தி படங்களின் சாதனையை முறியடித்து உள்ளது. 6 நாட்களில் ரூ.750 கோடி வசூலித்து இந்திய பட உலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

இந்த வசூல் ரூ.1,000 கோடியை நெருங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் முதல் பகுதியான பாகுபலி மொத்தமாக ரூ.650 கோடி வசூலித்து இருந்தது. அந்த வசூலை பாகுபலி-2 தாண்டி விட்டது. உலக அளவில் இதுவரை அவதார், டைட்டானிக், ஹாரிபாட்டர், லார்ட் ஆப் ரிங்க்ஸ் உள்ளிட்ட சில ஹாலிவுட் படங்கள் மட்டுமே ரூ.1,000 கோடி வசூலித்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி-2 படத்தை சீனா மற்றும் ஜப்பான் மொழிகளில் ‘டப்பிங்’ செய்து வெளியிடவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. ஜப்பானில் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ரஜினிகாந்தின் பல படங்கள் ஜப்பான் மொழியில் வெளியிடப்பட்டு உள்ளன. பாகுபலி-2 படத்தை மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் பாராட்டி உள்ளனர்.

இந்த நிலையில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பாகுபலி-2 படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “பாகுபலி-2 படம் இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளது. இந்த படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்பும்படி மத்திய அரசிடம் சிபாரிசு செய்வேன். பாகுபலி-2 படக்குழுவினர் அனைவரையும் தலைநகர் அமராவதிக்கு அழைத்து பாராட்டு விழா நடத்துவேன்” என்றார்.