full screen background image
Search
Saturday 4 May 2024
  • :
  • :
Latest Update

கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் கைது

மதுரை ஆனையூரைச் சேர்ந்தவர் திவ்யபாரதி, சமூக சேவகர். மேலும் இவர் லெனினிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்தவர்.

2009-ம் ஆண்டு மதுரையில் உள்ள ஆதி திராவிடர் விடுதியில் தங்கிப் படித்த சட்டக்கல்லூரி மாணவர் சுரேஷ் பாம்பு கடித்து உயிரிழந்தார். அவரது உடல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தது.

ஆதிதிராவிடர் விடுதியில் போதிய வசதிகள் செய்து தர வேண்டும், இறந்த மாணவருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரி திவ்யபாரதி, உயிரிழந்த சக மாணவரின் சடலத்தை வாங்க மறுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவருடன், எழுச்சி மாணவர் அமைப்பைச் சேர்ந்த நிஜாமும் பங்கேற்றார். இது தொடர்பாக மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. இதில் திவ்யபாரதியும், நிஜாமும் ஆஜர் ஆகாமல் இருந்து வந்தனர். மறியல் வழக்கு தொடர்பாக கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.

அதன் பேரில் மதிச்சியம் போலீசார் இன்று வீட்டில் இருந்த திவ்யபாரதியைக் கைது செய்து மதுரை மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவருடன் நிஜாமும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த மதுரை 2-வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சக்திவேல், இருவருக்கும் ஒருவாரம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி இருவரும் ஒரு வாரத்திற்குள் போலீஸ் நிலையத்திற்கு வந்து தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.

கைதான திவ்யபாரதி மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் “கக்கூஸ்” என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்திருந்தார். இதற்காக அவருக்கு சென்னையில் நடந்த விழாவில் “பெரியார் சாக்ரடீஸ் விருது” வழங்கப் பட்டது.

சமீபத்தில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி சேலத்தைச் சேர்ந்த மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்திலும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் குபேரனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் திவ்ய பாரதியை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து நிருபர்களிடம் பேசிய திவ்யபாரதி, “சமூக செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப் போடுவது புதிதல்ல. அவர்களை முடக்குவதற்காகத் தான் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது.” என்றார்.