full screen background image
Search
Tuesday 7 May 2024
  • :
  • :
Latest Update

சிலிர்க்க வைக்கும் ‘சிவ சிவாயம்’ பட்டித்தொட்டியெங்கும் வைரலான ‘பகாசூரன்’ பாடல்

பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரௌபதி’,  ‘ருத்ர தாண்டவம்’  படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G. ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் அவர் அடுத்ததாக தயாரித்து இயக்கும் படம் ’பகாசூரன்’.

இந்த  படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார். ‘ ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு  நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர். மற்றும் மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல்ஜெயந்த், பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி நடித்துள்ளனர்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவரும் நிலையில் சில தினங்களுக்கு முன் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று படத்தில் இடம் பெறும் ‘சிவ சிவாயம்’ என்ற பாடல் வெளியிடப்பட்டது. இசை மேதை பாபநாசம் சிவன் எழுதிய ‘சிவ சிவாயம்’ என்ற அந்த பாடலை இசையமைத்து பாடியுள்ளார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். ஜானி மாஸ்டர் நடன அமைப்பில் ஃபருக் ஜே பாட்ஷா ஒளிப்பதிவில் செல்வராகவன் நடித்திருக்கும் அந்தப்பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்து மெகா ஹிட்டடித்துள்ளது.

கேட்டவர்களை திரும்ப திரும்ப கேட்கவைப்பது போல பார்த்தவர்களை திரும்ப திரும்ப பார்க்கவைப்பதுபோல ‘சிவ சிவாயம்..’ பாடல் சினிமா ரசிகர்களை மட்டுமின்றி சிவ பக்தர்களையும் பரவசப்படுத்தி வருகிறது. குறிப்பாக சிவனடியார் போன்ற தோற்றத்தில் ”என் அப்பன் அல்லவா.. என் தாயும் அல்லவா…” என்று சிவலிங்கம் முன்பு கைகளை விரித்தபடி செல்வராகவன் அந்த பாடலை பாடும்போது மேனி சிலிர்த்து உருகமுடிகிறது.

பெருநகரங்கள் மட்டுமின்றி கடைக்கோடி கிராமம் வரை ‘சிவ சிவாயம்’ பாடல் சென்றடைந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கிறங்கடித்து ‘பகாசூரன்’ படத்திற்கான எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. இப்படத்தின் பாடல்களை எம்.ஆர்.டி. மியூசிக் வெளியிடுகிறது.

படத்திற்கு எஸ்.தேவராஜ் எடிட்டிங் செய்ய,  கலை இயக்குனராக எஸ்.கே பணியாற்றுகிறார். மிரட்டல் செல்வா சண்டை பயிற்சி செய்ய, ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.