பல்டி திரைவிமர்சனம்
நடிகர்கள்:சாந்தானு,ஷேன் நிகம்,செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன், மற்றும் பலர்.
இசை:சாய் அபாயங்கர்,
இயக்கம்:உன்னி சிவலிங்கம்,

சாந்தானு ஷேன் நிகம் நடிப்பில் வெளியாகியுள்ள பல்டி படம், ஆரம்பத்தில் ஒரு சாதாரண விளையாட்டு டிராமாவாகத் தோன்றினாலும், கதையின் நகர்வில் அது திடீரென வாழ்க்கை, நட்பு, துரோகம், ஏமாற்றம் போன்ற பல்வேறு உணர்வுகளோடு பரபரப்பாக மாறுகிறது. சுப்பிரமணியபுரம் படத்தைக் குறிப்புக்கு வரவைக்கும் விதத்தில், பழக்கத்தால் நண்பர்கள் எவ்வாறு சிக்கலில் சிக்குகிறார்கள் என்பதை உணர்ச்சிகரமாக சொல்லியுள்ளது.
ஷேன் நிகம் தனது 25வது படத்தில் அலட்டலில்லா இயல்பான நடிப்பால் கவர்ந்துள்ளார். காதல் காட்சிகளிலோ, குழப்பத்துடன் நிற்கும் தருணங்களிலோ அனுபவம் மிளிரும் வகையில் நடித்துள்ளார். ஆனால், படத்தின் இதயம் சாந்தனுவே! சுயநல முடிவுகளால் நண்பர்களையே பிரச்சினைகளில் தள்ளும் அவரது கதாபாத்திரம், நல்லவரா கெட்டவரா என்பதில் குழப்பத்தை உருவாக்கி, மிகச்சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
செல்வராகவன் எப்போதும் போல சீரான, நிதானமான நடிப்பைக் கொடுத்து கவர்ந்துள்ளார். குறிப்பாக பணம் கொடுத்து கட்டாதவர்களை சிரித்தபடி அவமானப்படுத்தும் காட்சிகளில் அவர் அசத்தியுள்ளார். அல்போன்ஸ் புத்திரனின் ஈகோ சிக்கலான கேரக்டரும் வலிமையாகத் திகழ்கிறது. ஜீ மா நடித்த பாத்திரம், இரண்டாம் பாதியில் கதைக்கு சுவாரஸ்யமான திருப்பமாக அமைந்துள்ளது. ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் மற்ற நண்பர்களின் நடிப்பும் படத்துக்கு வலுவூட்டுகிறது.
படத்தின் முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் நடக்கும் எமோஷனல் போராட்டங்கள், நண்பர்களுக்குள் உருவாகும் மோதல்கள், அதிரடியான சண்டைகள் என பரபரப்பை கூட்டுகிறது. ஷேன் நிகம், சாந்தனு உள்ளிட்ட நால்வரும் சண்டைக் காட்சிகளில் முழு ஆற்றலுடன் நடித்துள்ளனர்.
சாய் அபாயங்கர் இசை, மாஸ் காட்சிகளில் படத்திற்கு பலம் சேர்க்கிறது. பாடல்கள் சராசரியாக இருந்தாலும், பின்புல இசை பரபரப்பை தூக்குகிறது.
மொத்தத்தில், பல்டி ஒரு நட்பு, சண்டை, துரோகம், உணர்ச்சி ஆகிய அனைத்தையும் கலந்த அதிரடி எண்டர்டெய்னர். கொஞ்சம் நீளமானதாக இருந்தாலும், ஆக்ஷன் மற்றும் உணர்ச்சி நிறைந்த படங்களை விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த விருந்து!
விருது விழாக்களில் பேசப்படும் படங்களில் ஒன்றாக பல்டி இடம்பிடிக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.

