பூக்கி – திரைவிமர்சனம்
நடிகர்கள் :விஜய் ஆண்டனி அஜய் திஷான், தனுஷா, பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு மற்றும் பலர்.
இசை:விஜய் ஆண்டனி,
ஒளிப்பதிவு:கணேஷ் சந்திரா,
தயாரிப்பு: மீரா விஜய் ஆண்டனி.

நாயகன் அஜய்யும், நாயகி தனுஷாவும் காரில் செல்லும்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. சிக்னலில் வேறொரு கார் இவர்களது காரின் மீது இடித்துவிட்டு வேகமாக செல்ல, துரத்திச் சென்று அந்த காரை மடக்கி சண்டை போடுகிறார் அஜய். இருவரும் அடிதடியில் ஈடுபட தனுஷா தடுக்கிறார், சமாதானம் ஆகாததால் அஜய்யை கண்ணத்தில் ஓங்கி அடிக்கிறார். அஜய்யும் கோபப்பட்டு தனுஷாவை கண்ணத்தில் அடிக்கிறார். இவர்களது காதல் பிரேக் அப் ஆகிறது.
இந்த சம்பவத்தை அப்பகுதியினர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட, ஒரே பரபரப்பாகிறது. இருவருமே வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு அந்த வீடியோ பேசு பொருளாக மாறுகிறது.
இவர்களது காதல் என்னானது ? இருவரும் இணைந்தார்களா ? இருவரும் வேறு வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்களா ? இல்லையா என்பது மீதிக்கதை.

இன்றைய காலகட்டத்தில், நம் கண் முன்னே நடைபெறும் சமூக சீரழிவுகளையும், கலாச்சார சீர்கேட்டையும் எதார்த்தமாக, களகளப்பாக திரைக்கதையை அமைத்து காட்சிப்படுத்திய இயக்குநருக்கு பாராட்டுக்கள்.
இன்றைய சூழலில் ஆண், பெண் இருவரும் சம்பாதிப்பதால் பிள்ளைகளின் காதலுக்கு பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ஆனால் அவர்கள் பிரிவுக்கும், சந்தோஷத்திற்கும் அவர்களே காரணமாகிறார்கள் என்பதையும் தெளிவாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
அஜய் திஷன் மற்றும் ஆர்.கே. தனுஷா ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை நம்பிக்கையுடன் வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக உணர்ச்சி வெளிப்பாடுகளில் இருவரும் கவனம் ஈர்க்கிறார்கள்.
படத்தில் மனதை தொடும் சில காட்சிகள் இருக்கின்றன. அதில் நாயகன், தனது தந்தையின் நீண்டநாள் கனவான சொந்த வீட்டை வாங்கிக் கொடுக்கும் காட்சி சிறப்பாக அமைந்துள்ளது. அந்த காட்சியில் தந்தையாக நடித்துள்ள பாண்டியராஜனின் இயல்பான நடிப்பு பாராட்டத்தக்கது.
படத்திற்கு இசை மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. பாடல்கள் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மொத்தத்தில் பூக்கி 2k கிட்ஸ் காதல் காலம்.

