full screen background image
Search
Monday 13 May 2024
  • :
  • :
Latest Update

வைகை எக்ஸ்பிரஸ் – விமர்சனம்

சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிக்கும் மூன்று பெண்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களில் ஒருவர் துப்பாக்கி சுடும் வீராங்கனையான நீது சந்திரா.

மூன்று பேரில், இரண்டு பேர் இறந்துவிட, நீது சந்திரா மட்டும் பலத்த காயத்துடன் உயிர்போகும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இந்த கொலையை விசாரிக்க ரெயில்வே போலீஸ் சிறப்பு பிரிவில் பணியாற்றும் ஆர்.கே. நியமிக்கப்படுகிறார்.

கொலைக்கான விசாரணையில் தீவிரமாக களமிறங்கும் ஆர்.கே.வுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. இறுதியில் இந்த கொலையை யார் செய்தார்? மேலும் நீது சந்திராவை இந்த நிலைமைக்கு காரணமானவர்களை ஆர்.கே. கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதை யாரும் எதிர்பார்க்கதாகபடி படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் ஆர்.கே. கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். மேலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குற்றவாளியை நெருங்கும் நேரத்தில் ரசிகர்களிடமும் அந்த பரபரப்பை ஏற்படுத்திவிடுகிறார். இவர் பேசும் வசனங்களும் அனல் பறக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார். இப்படம் ஆர்.கே.வுக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது.

முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் நீது சந்திரா, இரண்டு கதாபாத்திரத்தையும் வேறுபடுத்தி காட்டியுள்ளார். அவரை சுற்றியுள்ள மர்மங்கள் விலகும் கிளைமாக்ஸ் காட்சி நமக்கே மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுக்கிறது.
ஆர்.கே.வுடன் வரும் மற்றொரு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நாசர், படத்தை கலகலப்பாக கொண்டு சென்றிருக்கிறார். மேலும் சுமன், இனியா, ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், சுஜா வருணி, தீவிரவாதியாக வரும் ஆர்.கே.செல்வமணி, கதாசிரியராக வரும் மனோபாலா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல் திரைக்கதையும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்லுகிறது. ரெயிலில் கொலை, அதன்பின் நடக்கும் விசாரணை, விசாரணையில் ஏற்படும் திருப்பங்கள் என முதலில் இருந்து கடைசி வரை வேகம் குறையாமல் படத்தை இயக்கியிருக்கிறார் ஷாஜி கைலாஸ். யாரும் எதிர்ப்பார்த்திராத திருப்பங்களும், அடுத்தடுத்து காட்சியை யூகிக்க முடியாதளவிற்கு காட்சிபடுத்தியிருக்கிறார்.

சஞ்சீவ் சங்கரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. இவரின் ஒளிப்பதிவு படத்தின் வேகம் குறையாமல் விறுவிறுப்பாக நகர உதவியிருக்கிறது. தமனின் பின்னணி இசையும், டான் மேக்ஸின் எடிட்டிங்கும் திரைக்கதைக்கு வலு சேர்த்திருக்கிறது.

சினிமாவின் பார்வையில் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ அதிவேகம்.