full screen background image
Search
Wednesday 1 May 2024
  • :
  • :
Latest Update

‘108’ ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு தடை

தமிழகம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவசர உதவி சேவையில் உள்ளனர். இவர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போனஸ் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி போனஸ் வழங்கக் கோரி வரும் 17 முதல் 19 ஆம் தேதி வரை வேலை நிறுத்தம் நடத்த உள்ளதாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால், அவசர மருத்துவ உதவி பெரிதும் பாதிக்கப்படும் என்றும், எனவே, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டு வந்தது. இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றத்தில், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்பாக பொதுநல மனுவை வழக்கறிஞர் பேட்ரிக் என்பவர் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அத்தியாவசிய சேவைகளின் கீழ் ஆம்புலன்ஸ் வருவதால் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட கூடாது என கூறி, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடைவிதித்தது.

இதற்கிடையே, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அரசு ஊழியர்கள் இல்லை எனவும் ஜிவிகே நிறுவன ஊழியர்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.