வெள்ளகுதிர – திரை விமர்சனம்

cinema news movie review

வெள்ளகுதிர – திரை விமர்சனம்

நடிகர்கள்:ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ், மற்றும் பலர்,

இசை:பரத் ஆசீவகன்,

ஒளிப்பதிவு:ராம் தேவ்,

இயக்கம்:சரண்ராஜ் செந்தில்குமார்.

படத்தின் கதைப்படி, கதையின் நாயகன் ஹரிஷ் ஓரி டவுனில் வாழ முடியாத ஒரு மோசமான சூழலில் ஊரை விட்டு வெளியேறி அவரது முன்னோர்கள் வாழ்ந்த பூர்வீக மலை கிராமத்துக்கு தன் மனைவி, மகனுடன் வருகிறார். அங்கு வாழ்வாதாரத்துக்கு வழி தெரியாமல் மூட்டை சுமக்கும் வேலைகளை செய்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்துகிறார். அதே நேரத்தில் அந்த மலையில் ஊர் பெரிய மனிதர் என்ற போர்வையில் இருக்கும் எழுவன் ஊரில் இருக்கும் மக்களிடம் இருக்கும் நிலங்களை தந்திரமாக எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை மலையை விட்டு கீழே அனுப்பும் வேலையை செய்கிறார். அந்த மலையில் காய்ச்சும் மூலிகை ரசத்துக்கு ஊரில் கடும் கிராக்கி. அரை தெரிந்து கொள்ளும் ஹரிஷ் ஓரி சாராயம் காய்ச்சுவதையே தன் தொழிலாக்கி பெரும் பணம் சம்பாதிக்க துவங்குகிறார். அதன் பின் அவர் வாழ்க்கை எப்படி மாறியது? அந்த ஊர் மக்களின் நிலை என்ன? எழுவனின் சூழ்ச்சியை மக்கள் தெரிந்து கொண்டு அதில் இருந்து மீண்டார்களா? அந்த கிராம மக்கள் கிராமத்தை மீட்டார்களா? என்பதே மீதிக்கதை.

கதையின் மையக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹரிஷ் ஓரி. மிக இயல்பாக, யதார்த்தமான நடிப்பை தந்திருக்கிறார். திக்கித் திக்கிப் பேசும் அந்த கதாபாத்திரத்தில் அப்படியே இயல்பாக நடித்திருக்கிறார். கொஞ்சம் நெகடிவ் கதாபாத்திரம் என்றாலும் அதை நடிப்பில் காட்டிய விதமும், அந்த கதாபாத்திரத்தின் மாற்றமும் சிறப்பு. அவரின் மனைவியாக அபிராமி போஸ். படித்த, புத்திசாலி பெண்ணாக அந்த கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார்.மற்றும் கதாநாயகி உடன் போஸ்ட் வுமனாக ஜுவிதா வெங்கடேசனும் தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார், அவரின் உளவியலை தன் நடிப்பால் உணர்வுப் பூர்வமாக காட்டியுள்ளார். உதிரி விஜயகுமார் வில்லத்தனமான ஒரு கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கூட இருந்தே தன் காரியத்தை சாதிக்கும் அவரின் உத்தி கச்சிதம். ரெஜின் ரோஸ், மெலடி, ஜெயலக்ஷ்மி, NSD அறிவு, மற்ற நடிகர்கள் என எல்லோருமே மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

பரத் ஆசீவகன் இசையில் பாடல்கள் அனைத்தும் மண் மணம் மாறாமல், பாடல் வரிகள் புரியும் வகையில் அமைந்திருக்கிறது. படத்துக்கும் பலம் சேர்க்கிறது. பின்னணி இசையும் படத்தை தூக்கி நிறுத்துகிறது. ராம் தேவ் ஒளிப்பதிவு காடு, மலை என அத்தனையையும் அவ்வளவு நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறது. மலை கிராமத்தை காட்டிய விதம் அவ்வளவு அழகு.

இயக்குனர் சரண்ராஜ் செந்தில்குமார் மலைவாழ் மக்களின் வாழ்க்கை பின்னணியில் நல்ல ஒரு படத்தை தந்திருக்கிறார். மனிதர்களின் பேராசை, மலையின் மீதான மலைவாழ் மக்களின் பாசம், அவர்களின் வாழ்வியல் என அத்தனையும் திரைக்கதையில் அழகாக கோர்த்திருக்கிறார். மலைவாழ் மக்களின் உரிமையையும் பேசியிருக்கிறார். மக்களின் ஒற்றுமையும், தூய்மையான அன்பும், மண் மீதான பற்றும் எப்படி அந்த மண்ணை மாற்றுகிறது என்பதையும் சொல்லியிருக்கிறார். மொத்தத்தில் மிக யதார்த்தமான ஒரு நல்ல சினிமாவை தந்த இயக்குனர் சரண்ராஜ் செந்தில்குமாருக்கு பாராட்டுக்கள்.