மதிப்பிற்குரிய பாரதிய ஞானபீடக் குழுவினருக்கு,

அன்பும் நன்றியும் வாழ்த்துகளும்
கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு ஞானபீட விருது அளிக்கப்பட்டிருப்பது தமிழ் இலக்கியச் சூழலில் நிகழ்ந்திருக்கும் ஒரு மாபெரும் திறப்பு. இந்திய இலக்கியத்தின் உச்ச பீடம், தகுதியான ஒருவரைச் சென்றடைந்திருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
இக்கடிதத்தை எழுதும் நான் சீனு ராமசாமி. தமிழ்த் திரையுலகில் மானுட அறத்தையும், எளிய மக்களின் வாழ்வியலையும் பதிவு செய்யும் திரைப்படங்களுக்காகத் தேசிய விருது பெற்ற இயக்குநராக அறியப்பட்டவன். திரைப்படங்களைத் தாண்டி என் அகம் செயல்படும் முதன்மைத் தளம் கவிதை. எனது கவிதை நூல்களான ‘புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை’, ‘கோயில் யானையின் சிறுவன்’, ‘மாசி வீதியின் கல் சந்துகள்’, ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்’, ‘மேகங்களின் பேத்தி’, ‘நதியழகி’, ‘முதல் ருசி’, ‘நிலத்தவள்’, ‘தயை’, ‘காற்றால் நடந்தேன்’ ஆகியவையும், ‘சீனு ராமசாமி தேர்ந்தெடுத்த கவிதைகள்’ (ந. முருகேச பாண்டியன் தொகுத்தது), ‘என்னைப் பிடித்த கவிதைகள்’ (என் தொகுப்பு) போன்ற ஆக்கங்களும் தமிழின் மனநிலையைப் பிரதிபலிப்பவை. இந்த உள்ளூர் தரிசனங்கள் ஆங்கிலத்தில் ‘Cat sleeping upon in the complaint box’, ‘Days of small brook and other poems’ ஆகவும், லண்டன் பெகாசஸ் (Pegasus) பதிப்பகத்தின் வாயிலாக ‘Hands of forgotten faces’ ஆகவும் மொழிபெயர்க்கப்பட்டு உலகளாவிய வாசகப் பரப்பைச் சென்றடைந்துள்ளன என்பதை இங்குப் பகிர்வதில் ஒரு படைப்பாளியாக நிறைவடைகிறேன்.
நவீன இலக்கியத்திற்கும் வெகுஜனக் கலைக்கும் இடையே இயங்கும் ஒருவராக கவிஞர் வைரமுத்து அவர்களின் இலக்கியப் பங்களிப்பை மிக உன்னதமானதாகவே கருதுகிறேன். அவரது முதன்மையான பங்களிப்பு என்பது ஒட்டுமொத்தத் தமிழ்க் கவிதைக்குமானது, இதன் இலக்கியத்துள் நுழைந்து நவீனக் கடலில் சங்கமித்தவர்கள் என் போல்
இங்கு நிறைய உண்டு.
நவீன மருத்துவமாக, சாலைகளாக, தொழில்நுட்பமாகச் சாமானியர்களை மிக எளிதாகச் சென்றடைந்த ஒரு காலகட்டத்தில், தமிழ் இலக்கியம் எளிய மக்களைச் சென்றடையச் செய்த படைப்பாளிகளில் முக்கியமானவர்
அந்தச் சூழலில், தீவிர இலக்கியத்திற்கும் வெகுஜன வாசிப்புக்கும் இடையேயான பெருவெளியில் மிகத் தீவிரமாக இயங்கி, பெருந்திரளான மக்களை இலக்கியத்தின் சுவை நோக்கி மடைமாற்றியவர் கவிஞர் வைரமுத்து. ஒரு கலை வெகுஜன ஏற்பைப் பெறுவது என்பது ஒருபோதும் தகுதிக்குறைவு அல்ல மாறாக, ஒரு கலை உண்மையாகவே மக்களின் கலையாக மாறுவதுதான் அதன் தலைச்சிறந்த இலக்கணம். வெறும் பண்டிதத்தன்மையோடு முடங்கிப் போகும் எந்தவொரு கலையும், மனிதர்களின் இதயத்தைச் சென்றடையாமல் மூளையிலேயே வறண்டு தங்கிவிடுகிறது. ஆனால், கவிஞர் வைரமுத்துவின் திரையிசைப் பாடல்களில் இழையோடிய ஆழமான கவித்துவமும், நுட்பமான உள்ளுணர்வும், தத்துவார்த்தமான மேன்மையும் அந்த பண்டிதத் தன்மையை உடைத்து மக்களின் இதயங்களை நேரடியாகச் சென்றடைந்தன. இன்று தமிழ் இலக்கியத்திற்கு என்று ஒரு மாபெரும் வாசகப்பரப்பு உருவாகியிருக்கிறது என்றால், அதற்கு முதன்மை வாசலாகத் திகழ்ந்தவர் அவரே.ஏழு தேசிய விருது பெற்ற பாடல்கள் கவிதை உணர்வுக்கு சாட்சி, அந்த பாடல்களின் தரம் எவரும் குறைக்க முடியாதது பிறகு
நாட்டார் பாடல்களை இலக்கியமில்லை என புறக்கணித்து விடமுடியாது.
மறுபுறம், அவரது நாவல்கள் தமிழ் நிலத்தின் ஆவணங்கள். அவை வெறும் புனைவுகள் அல்ல; மிகவும் பின்தங்கிய சாமானியர்கள் மற்றும் உழவர் குடிமக்களின் வாழ்வைப் பதிவு செய்த செவ்வியல் ஆக்கங்கள். மண்ணின் மைந்தர்களுக்கே உரித்தான புழங்குமொழிச் சொற்களையும், விவசாய வாழ்வின் தனித்துவமான கலைச்சொற்களையும், அவர்களின் பண்பாட்டு அசைவுகளையும் தனது நாவல்களில் அவர் மிகச் சிறப்பாகவும் விரிவாகவும் பதிவு செய்திருக்கிறார். உழவர்களின் வீழ்ச்சியையும் இருத்தலுக்கான போராட்டத்தையும் அந்த நிலத்தின் அசலான மொழியிலேயே காவியத் தன்மையோடு அவர் படைத்தளித்த விதம் ஈடு இணையற்றது.
இந்த உயரிய விருது, ஒரு தனிமனிதருக்கான கௌரவம் என்பதைத் தாண்டி, தமிழுக்கும் அதன் தொன்மையான மரபுக்கும், அதன் தொடர்ச்சியாக இயங்கும் இலக்கியச் செயல்பாட்டிற்கும் கிடைத்திருக்கக்கூடிய ஆகப்பெரும் அங்கீகாரம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்த ஞானபீடக் குழுவினருக்கு ஒரு சக படைப்பாளியாக என் நெஞ்சார்ந்த வணக்கங்களைப் பதிவு செய்கிறேன்.
அன்புடன்,
சீனு ராமசாமி
தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் மற்றும் கவிஞர்.

