சாரா – திரை விமர்சனம்
நடிகர்கள்:விஜய் விஷ்வா,சாக்ஷி அகர்வால்,யோகிபாபு, தங்கதுரை, ரோபோ சங்கர், மற்றும் பலர்.
இசை:கார்த்திக் ராஜா,
ஒளிப்பதிவு: j.லட்சுமணன் குமார்,
இயக்கம்: செல்ல குட்டி,
தயாரிப்பு: ஸ்ரீ பட்டவன்.

குணா, காதல் கொண்டேன், சைக்கோ என தமிழ் சினிமாவில் ஒரு சில அழுத்தமான படங்கள் வெளியாகி நம் மனதில் இன்றும் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன, அந்த படங்களில் எல்லாம் நாயகியின் கதாபாத்திரம் ரொம்பவே புனிதமானதாக, ஒரு தாயாக, தோழியாக, கடவுளாக நினைக்க வைக்கும் அளவுக்கு இருந்திருக்கும். அப்படி ஒரு படத்தை தரும் முயற்சியில் இயக்குனர் செல்லக்குட்டி இயக்கியிருக்கும் படம் தான் “சாரா”. விஜய் விஷ்வா, சாஷி அகர்வால் நடித்துள்ள இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, நாயகி சாக்ஷி அகர்வாலும், நாயகன் விஜய் விஷ்வாவும் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பொறியாளர்களாக பணிபுரிகிறார்கள். ஐந்து வருடங்களாக காதலித்து வரும் இருவருக்கும் திருமணம் முடிவாகிறது. திருமணத்துக்கு சில நாட்கள் இருக்கும் நிலையில் நடக்கும் ஒரு சம்பவம் அவர்கள் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. அவர்களின் கன்ஸ்ட்ரக்ஷனில் கொத்தனாராக வேலை செய்யும் செல்லக்குட்டியும், சாக்ஷி அகர்வாலும் பள்ளி தோழர்கள். ஒரு இக்கட்டான சூழலில் சாக்ஷிக்காக, அவரது காதலுக்காக எல்லாவற்றையும் விட்டு வந்த விஜய் விஷ்வாவா? அல்லது பள்ளியில் படிக்கும்போதே சாக்ஷிக்காக வாழ்க்கையையே தியாகம் செய்த செல்லக்குட்டியா? இந்த இருவரில் சாக்ஷி யாரை காப்பாற்றுகிறார்? அப்படி அவர்களுக்குள் என்ன இருக்கிறது? அவர்கள் செய்த தியாகம் என்ன? என்பதே மீதிக்கதை.
படத்தின் நாயகி சாக்ஷி அகர்வால். வழக்கம் போல கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை அழகாக செய்திருக்கிறார். முதல் காட்சியிலேயே சேலையில் அழகாக வந்து ரசிக்க வைக்கிறார். பின் கதை திரில்லரை நோக்கி செல்லும்போது அதற்கான நடிப்பையும் தந்திருக்கிறார். விஜய் விஷ்வா நாயகன். ஆனாலும் இவருக்கு கதையில் வேலை கொஞ்சம் குறைவு தான். ஆனாலும் குறை இல்லாத நடிப்பை தந்திருக்கிறார்.
ஆனால் படத்தில் நாயகியை விட அதிக நேரத்தை ஆக்கிரமிப்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த செல்லக்குட்டி தான். அவரின் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் கொஞ்சம் நார்மலாக நடிக்கிறார். ஆனால் பிரசண்ட் காட்சிகளில் எல்லாம் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு. சில இடங்களில் கொஞ்சம் ஓவராகவும் போய் விடுகிறது.
படத்தின் வியாபாரத்துக்காக யோகி பாபு, மறைந்த ரோபோ சங்கர், தங்கதுரை ஆகியோரை நடிக்க வைத்த உணர்வு எழுகிறது. ஒரு சில காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கிறது. பொன்வண்ணன், அம்பிகா உள்ளிட்ட மூத்த நடிகர்கள் இந்த படத்திற்கு வலு சேர்க்கிறார்கள்.
ஜெ.லக்ஷ்மண் ஒளிப்பதிவு ஓரளவு உதவி செய்கிறது. ஒரே லொகேஷனில் பெரும்பாலான காட்சிகள் நகர்வதால் அதை முடிந்தளவு முயற்சி செய்து காட்டியிருக்கிறார். கார்த்திக் ராஜா இசை ஓகே ரகம். ஃபிளாஷ்பேக் காட்சிகளில் கொஞ்சம் உணர்வுப்பூர்வமான இசையை உணர முடிகிறது.
இயக்குனர் செல்லக்குட்டி எடுத்துக் கொண்ட கதைக்களம் எல்லாம் சிறப்பு. ஆனால் திரைக்கதை தான் கொஞ்சம் சுமாராக இருக்கிறது. அதை கொஞ்சம் மெறுகேற்றி இருந்தால் இன்னும் ரசிக்க வைக்கக் கூடிய படமாக அமைந்திருக்கும். மேலே சொன்ன கிளாசிக் படங்களின் அம்சங்கள் இந்த படத்தில் இருந்தாலும், மேக்கிங்கில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் கொஞ்சம் நல்ல படமாக தந்திருக்க முடியும். ஆனாலும் ஒரு பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு பரபரப்பான ஒரு திரில்லர் படத்தை தந்ததோடு அம்மா செண்டிமெண்ட், நட்பு என மற்ற உணர்வுகளையும் சொல்லும் படமாக தந்து கொஞ்சம் ரசிக்க வைக்கிறார். தேர்ந்த நடிகர்களின் பங்களிப்பு படத்தை இன்னும் கொஞ்சம் கரை சேர்க்கிறது. முதல் பாதி சுமாராக சென்றாலும் இரண்டாம் பாதி அதை ஈடு கட்டும் விதத்தில் அமைந்து நம்மை படத்தை பார்க்க வைக்கிறது.

