ஆர்எம்ரவிதிகிங்மேக்கர் – திரை விமர்சனம்

cinema news movie review

ஆர்எம்ரவிதிகிங்மேக்கர் – திரை விமர்சனம் 

“கடந்தகாலம் தெரியாதவர்க்கு நிகழ்காலம் புரியாது. நிகழ்காலம் புரியாதவர்க்கு எதிர்காலம் இல்லை”
பத்திரிகையாளர் ப.திருமாவேலன் சொன்ன இந்தக் கருத்து வழிமொழியக்கூடிய ஒன்று. நிச்சயமாக நம் இளைஞர்களுக்கு கடந்தகால அரசியல் ஆளுமைகளின் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் தற்கால அரசியல் வாதிகளில் யார் ஆளுமை மிக்கவர் என்று இனம் காண முடியும். முதிர்ச்சி நிறைந்த அரசியல்வாதியும், எம்.ஜி.ஆர் அவர்களின் வலுது கையுமாக இருந்த ஆர்.எம்.வீரப்பன் அவர்களைப் பற்றி இன்றைய தலைமுறை அறிந்த கொள்ள ஒரு ஆவணப்படத்தை எடுத்துள்ளனர். ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் மகன் தங்கராஜ் தயாரிக்க, பினு சுப்பிரமணியம் இயக்கியுள்ளார்

1926-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி ஆர்.எம்.வீரப்பன் பிறக்கிறார். பெரியாரின் கொள்கைகளில் ஈர்ப்பு ஏற்பட்டு, குடியரசு இதழில் வேலை செய்து, பின் அண்ணாவோடு இணைந்து பணியாற்றி, அதன்பின் எம்.ஜி.ஆரோடு இணைந்து மூச்சிருக்கும் வரை MGR என்ற மூன்றெழுத்தோடு பயணித்து, அதன்பின்னர் எம்.ஜி.ஆர் வழிபடி நடந்த ஜெயலலிதாவோடும் அரசியலில் கோலோச்சியவர் RMV.

அவரைப் பற்றிய நினைவுகள் மூலமாக பல அறிய தகவல்களை பரிமாறிக்கொள்கின்றனர் பல பிரபலங்கள். முதல்வர் ஸ்டாலின் துவங்கி நடிகர் சத்யராஜ் வரை பலரும் ஆர்.எம்.வீரப்பன் பற்றிய மலைப்புச் செய்திகளையும் மதிப்புத் தகவல்களையும் பகிர்ந்துகொள்கின்றனர்

பத்திரிகையாளர் ரா.கண்ணன் அவர்கள் பகிரும் தகவல் மிக முக்கியமானது மட்டுமின்றி உணர்ச்சிகரமானதும் கூட. 1969- தேர்தலில் தி.மு.க பெரும் வெற்றி பெறுகிறது. அந்த வெற்றி முகத்துக்கு எம்.ஜி.ஆரின் முகமே பெருங்காரணம். ஆனால் கலைஞர் எம்.ஜி.ஆருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை. கட்சியின் பொருளாளர் ஆக இருக்கும் எம்.ஜி.ஆர் கணக்கு வழக்கை கலைஞரிடம் கேட்கிறார். கலைஞர் எம்.ஜி.ஆரை உடனே கட்சியை விட்டு நீக்குகிறார். பதறிப்போகும் ஆர்.எம்.வீரப்பன் கலைஞரையும் எம்.ஜி.ஆரையும் இணைக்க கடுமையான முயற்சியை மேற்கொள்கிறார். முடியவில்லை. எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதாகச் சொல்கிறார். உடனே ஆர்.எம்.வீரப்பன் மின்னலாக வேலைகளைத் துரிதப்படுத்துகிறார். தனிக்கட்சி அறிவிப்பை எம்.ஜி.ஆர் வெளியிட்ட போது, “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்” என்று பேசுகிறார். அந்தப் பேச்சை எழுதிக்கொடுத்தவர் ஆர்.எம்.வீரப்பன். இந்த இடத்தில் நாம் புரிந்துகொள்ளக் கூடிய நல்ல அம்சம் ஒன்றுள்ளது.

ஆர்.எம்.வீரப்பன் நினைத்தால் எம்.ஜி.ஆர் முடிவை ஏற்காமல் கலைஞரோடு இணைந்து நல்ல பதவிகளை அனுபவித்திருக்க முடியும். ஆனால் நட்பின் ஆழம் கருதி துயரிலும் எம்.ஜி.ஆரோடு நின்றார்; எம்.ஜி.ஆர் வென்றார். இப்படி பல வரலாற்றுத் தகவல்கள் இந்த ஆவணப்படத்தில் இடம் பெற்றுள்ளது

பாட்ஷா பட சக்சஸ் மீட்டில் ரஜினி பேசிய வார்த்தைகளால் ஆர்.எம்.வீரப்பனுக்கு அமைச்சர் பதவி போனது. அந்த விசயத்தோடு சேர்த்து இன்னும் பல அரிய தகவல்களை ரஜினி சொல்கிறார். ஆர்.எம்.வீரப்பனின் பாடல் வரிகளின் தேர்வு குறித்து வைரமுத்துவும், முத்துலிங்கமும் பேசியிருப்பது சுவாரஸ்யமானவை. சரத்குமார், திருமாவளவன், தமிழிசை, ரங்கராஜ பாண்டே, ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட இன்னும் பல்வேறு ஆளுமைகளின் காணொளி சொற்கள் வழியாக இரண்டு மணி நேரத்தில் ஒரு வெற்றிகரமான மனிதரின் நேர்மையான வரலாற்றை அறிந்து கொள்ள முடிகிறது. ஆவணப்படம் என்றாலும், இன்றைய ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு அற்புதமாக தொகுத்திருக்கிறார் பினு சுப்பிரமணியம். எங்குமே போரடிக்கவில்லை. பெரியார் கொள்கை பிடிப்புள்ள ஆர்.எம்.வீரப்பன் அறநிலையத்துறை அமைச்சராக இருந்து ஸ்ரீரங்கம் கோபுரத்தை புனரமைத்த செய்தியெல்லாம் தரமான ரகம்.