ரிவால்வர்ரீட்டா – திரை விமர்சனம் 

cinema news movie review

ரிவால்வர்ரீட்டா – திரை விமர்சனம் 

நடிகர்கள்:கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார்,சுனில், கல்யாண்,மற்றும் பலர்.

இசை:ஷான் ரோல்டன்,

ஒளிப்பதிவு:தினேஷ் கிருஷ்ணன்,

இயக்கம்:ஜே.கே.சந்துரு,

தயாரிப்பு:பேஷன் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘தி ரூட்’.

இடம் மாறி, வேறு வீட்டுக்குள் புகுந்து விடுகிறார் உள்ளூர் டான். அந்த வீட்டில் அம்மா மற்றும் மூன்று மகள்கள். அங்கு நடக்கும் ரணகளத்தில் டான் பலியாகிறார். அவரது உடலை நான்கு பெண்களும் சேர்ந்து காரில் கொண்டு போகிறார்கள்… எங்காவது வீசி எறிந்துவிடலாம் என்று! டானை காணாமல் அவரது மகன் தேடுகிறார், டானின் தலை வேண்டும் என ஒருவர் ஹைதரபாத்தில் இருந்து வந்து இறங்குகிறார், அவர் சார்பாக டான் உடலைக் கைப்பற்றி ஒரு கும்பல் சுற்றுகிறது, அந்த நான்கு பெண்களை துரத்துகிறார் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர்… இந்த அதிரடி க்ரைம் த்ரில்லரை நகைச்சுவை கலந்து அளித்து இருக்கிறார்கள்.

நாயகி கீர்த்தி சுரேஷ் ஜொலிக்கிறார். பிணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என குடும்பமே தடுமாறும் போது ஐடியா கொடுப்பதாகட்டும், சகட்டு மேனிக்கு பேசும் அம்மா ராதிகாவை அடக்குவதாகட்டும்… ரசிக்க வைக்கும் நடிப்பு!

நகைச்சுவை நடிப்பில் ராதிகா அசத்துகிறார். அப்பாவித்தனமாக பேசி மாட்டிக்கொள்வது… பிறகு ஏதேதோ பேசி சமாளிப்பது என சிரிக்க வைக்கிறார்.

இதர கதாபாத்திரங்களில் நடித்துள்ள சூப்பர் சுப்பராயன், சுனில், அஜய் கோஸ், ரெடின் கிங்ஸ்லி, ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர் என அனைவருமே அசத்தலான நடிப்பால் கவர்கிறார்கள்.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கவர்கின்றன. குறிப்பாக பர்த் டே பாடல் கூடுதலாக ரசிக்க வைக்கிறது. அதோடு டார்க் காமெடிக்கு ஏற்ற ஈர்ப்பான பின்னணி இசை.

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு சிறப்பு. புதுச்சேரியை கண் முன் நிறுத்துகிறது. கார் சேசிங் காட்சிகள் அதிர வைக்கின்றன.

திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் சிறப்பு.

ஒரு பிணம், அதைக் கடத்தும் பெண்கள், அவர்களை துரத்தும் மூன்று கும்பல்கள் என சுவாரஸ்யமான முடிச்சை கடைசி வரை ரசிக்கும்படி கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் ஜே.கே.சந்துரு.

அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.