மிடில் கிளாஸ்’ – திரைவிமர்சனம்
நடிகர்கள்: முனீஸ் காந்த், வ விஜயலட்சுமி,ராதாரவி, காளி வெங்கட், குரேஷி, கோடங்கி வடிவேலு, வேல ராமமூர்த்தி மற்றும் பலர்.
இசை: பிரணவ் முனிராஜ்,
ஒளிப்பதிவு: சுதர்சன் சீனிவாசன்,
இயக்கம்: கிஷோர் முத்துராமலிங்கம்.
தயாரிப்பு: தேவ்,K. V. துரை.

சென்னையில் வசிக்கும் நடுத்தர குடும்பத் தலைவர் முனீஸ்காந்த். அவரின் மனைவி விஜயலட்சுமியின் நீண்ட நாள் கனவு எப்படியாவது ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும். ஆனால் முனீஸ்காந்தின் ஆசை வேறொரு திசை; சொந்த ஊருக்குத் திரும்பி விவசாயம் செய்து செட்டில் ஆக வேண்டும் என்பதே அவரது கனவு.
இந்த இருவரின் வாழ்க்கையிலும் ஒரு நாள் அதிர்ஷ்டம் தட்டிக்கொடுக்கிறது. ஆனால் அதனுடன் ஒரு பெரிய சிக்கலும் உருவாகிறது. அந்த சிக்கலை சமாளித்து, வாழ்க்கையில் அவர்கள் வெற்றியை அடைந்தார்களா என்பதுதான் படத்தின் மையக்கரு.
முனீஸ்காந்த், நடுத்தர குடும்பத் தலைவனாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். உடல் மொழி, உணர்ச்சி வெளிப்பாடு என அனைத்திலும் அவர் சிறப்பாகத் திகழ்கிறார். குறிப்பாக கிளைமேக்ஸ் சீனில் அவர் கொடுத்திருக்கும் தீவிரமான நடிப்பு பாராட்டத்தக்கது.
மனைவியாக நடித்த விஜயலட்சுமியும் நடுத்தர குடும்பத் தலைவியின் நெஞ்சழுத்தங்களையும் தன்னம்பிக்கையையும் நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். கடன்களை அடைத்து, குழந்தைகளின் எதிர்காலத்தைக் பாதுகாக்க எந்த முயற்சியையும் செய்யத் தயங்காத பெண்ணின் வாழ்வை நம்பகமாகக் காட்டியிருக்கிறார்.
ராதாரவி, காளி வெங்கட், குரேஷி, கோடங்கி வடிவேலு, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட அனைவரும் கதைக்கு வலு சேர்க்கும் வகையில் நடித்துள்ளனர்.
சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவு படத்துக்கு முக்கிய பலமாக உள்ளது. குறிப்பாக படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் வரும் ஏரியல் ஷாட்டுகள் கண் கவர்கின்றன. பிரனவ் முனிராஜின் பாடல்களும் பின்னணி இசையும் கதையோடு நன்றாக ஒட்டுகின்றன.
இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம், நடுத்தர குடும்பங்களின் உணர்வுகளையும், வாழ்வையும் யதார்த்தமாக திரையில் படைத்திருக்கிறார். கலகலப்பான முதல் பாதி ஈர்க்கக்கூடியதாக இருக்கும். இரண்டாம் பாதி சற்று மெதுவாக இருந்தாலும், கிளைமேக்ஸ் காட்சி மனநிறைவை அளிக்கிறது.
சுயநலத்தை விட மனிதத்தையும் அறத்தையும் முன்னிறுத்தி வாழ வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாகக் கூறுகிறது ‘மிடில் கிளாஸ்’.
மொத்தத்தில் — ‘மிடில் கிளாஸ்’ மனதில் டாப் கிளாஸ்.

