குட்டே – திரைவிமர்சனம் 

cinema news movie review

குட்டே – திரைவிமர்சனம் 

நடிகர்கள்: பிரித்விராஜ் ராமலிங்கம் காளி வெங்கட்,மைனாநந்தினி, ஆடுகளம் முருகதாஸ், போஸ் வெங்கட்

இசை: கோவிந்த் வசந்தா

இயக்கம் N. அரவிந்தன்

தயாரிப்பு: பிரித்விராஜ் ராமலிங்கம்.

 

 

பிருத்திவிராஜின் குடும்பம் ஊரில் இருக்க.. இவர் திருப்பூரில் ஒர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அந்த நிறுவனத்தின் மேலாளர், ஏதோ பிரச்சினையில் பிருத்விராஜை அறைந்துவிடுகிறார்.

அன்று பார்த்து சம்பளமும் கிரிடிட் ஆக… கொஞ்ச பணத்தை ஊருக்கு அனுப்பிவிட்டு, நிரம்ப பணத்தை எடுத்து மது அருந்த ஆரம்பித்து சளம்ப ஆரம்பிக்கிறார் நாயகன்.

வீட்டு உரிமையாளர், வாடகைக்கான ரசீதைத் தர.. இவரோ, ‘முறைவாசல் முன்னூறு ரூபாய்னு போட்டுருக்கே… உன் வீட்டு வாசலை தெளித்து கோலம் போடுறதுக்கு நான் ஏன் முறைவாசல் தரணும்’ என்று ரஃப் அண்ட் டஃப்பாக பேச.. வாக்குவாதம் முற்ற.. வீட்டு உரிமையாளரின் மண்டையை உடைத்துவிடுகிறார் நாயகன். அந்த நபர் காவல் நிலையத்துக்கு போன் செய்கிறார்.

அங்கிருந்து எஸ்கேப் ஆகும் நாயகன், தன்னுடன் கல்லூரியில் படித்த மைனா நந்தினியின் வீட்டிற்கு செல்ல திட்டமிடுகிறார். ‘அட.. இன்று நமது பிறந்தநாள் ஆச்சே’ என சிந்திப்பவர், ஒரு கேக் வாங்கிக்கொண்டு அங்கே செல்கிறார்.

அங்கே ரகளை இடையில் இன்னொரு போதை ஆசாமியான காளி வெங்கட் பழக்கமாக.. அவரது ஆட்டோவில் ஏறி ஏடி.எம். மிசினை உடைக்கிறார்.

இதற்கிடையே காவல்துறையினர் பிடிக்க.. அங்கிருந்து வாக்கி டாக்கியுடன் எஸ்கேப் ஆகிறார்.

இப்படி அடுத்தடுத்து ரணகளம்… இறுதியில் என்ன ஆனது என்பதுதான் சுவாரஸ்யமான கதை.

படத்தைத் தயாரித்து கதை எழுதி நாயகனாக நடித்திருக்கும் பிரித்திவிராஜூக்கு பாராட்டுகள். அத்தனை எதார்த்தமான நடிப்பை அளித்து இருக்கிறார். நிஜ குடிகாரர் போலவே நடை, உடை(!), பாவனை, உடல்மொழி என அசத்துகிறார்.

அவரது (முன்னாள்) கல்லூரி தோழியாக வரும் மைனா நந்தினி மற்றும் அவரது கணவராக வரும் ஆடுகளம் முருகதாஸ் இருவரும் சிறப்பாக நடித்து இருக்கின்றார்கள். கணவன் எதிரிலேயே (முன்னாள்) கல்லூரி நண்பன், போதையில் காதல் வசனம் பேச நந்தினி வெளிப்படுத்தும் தவிப்பு சிறப்பு. அவர் நாயகனிடம் “செத்துத் தொலையேண்டா… ஏன்டா உசுர வாங்குறே” என்பதும், முருகதாஸ், “என்னடி நடக்குது இங்கே..” என கையாலாகாமல் புலம்புவதும்.. ரசிக்கவைக்கிறது.இன்ஸ்பெக்டராக வரும் விஜய் முருகன், சப்-இன்ஸ்பெக்டராக வரும் ஜீவா சுப்பிரமணியம். பஸ் கண்டக்டராக வரும் போஸ் வெங்கட்,பகவதி பெருமாள் (பக்ஸ்) என அனைவருமே பாத்திரம் அறிந்து நடிப்பை அளித்து இருக்கிறார்கள். (ஆட்டோ டிரைவராக வரும் காளி வெங்கட்டும் எப்போதும்போல் கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். ஆனால் இதுபோன்ற வேடங்களை அவர் தவிர்க்கலாம்.)

கோவிந்த் வசந்தா இசையில், ‘அம்புலியே ஆராரோ..’, ‘மின்மினியே ராசாத்தி..’ உள்ளிட்ட பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும், ஒரு கதாபாத்திரமாகவே திரைக்கதை கூடவே ஓடி வருகிறது. அற்புதம்.

கார்த்திக் நேத்தாவின் பாடல் வரிகள் வழக்கம்போல் படத்தோடு ஒன்றி, மயக்குகிறது. (இவரது வாழ்க்கை அனுபவம்தான் கதை!)

மதன்குணதேவ் ஒளிப்பதிவு, படத்துக்கு பலம். உறுத்தல் இல்லாத ஒளிப்பதிவு. இரவு நேர திருப்பூர், சுடுகாட்டு காட்சி, காவல் நிலையம்… என அனைத்து ஸ்பாட்டுக்கும் நம்மை நேரே அழைத்துச் சென்றுவிடுகிறது.

குடி என்பது தனி நபரின் பிரச்சினை அல்ல.. இந்த சமுதாயத்தின் நிர்ப்பந்தம் என்பதை உணர்த்தும் திரைக்கதைக்கு பாராட்டு. அதே போல் வசனம் சிறப்பு. இரண்டும் பூர்ணா ஜெஸ் மைக்கேல்.

பொதுவாக சிறப்பு சத்தம் என்பதை திரைப்படங்களில் தனியாக குறிப்பிடுவார்கள். இந்தப் படம் முழுதுமே சிறப்பு சத்தம்தான். குறிப்பாக, பனியன் தொழிற்சாலையில் மிசின்கள் ஓட… அதற்கிடையே பின்னணி இசை ஒலிக்க அபாரம். சவுண்ட் டிசைன் : S.அழகிய கூத்தன் சுரேன். G. சவுண்ட் மிக்ஸிங்: சுரேன்.G.

ஸ்டண்ட் இயக்குனர் ஓம் பிரகாஷும் கவனத்தை ஈர்க்கிறார். இயல்பை மீறாத சண்டைக் காட்சி. அதுவும் குடிகாரர்களுக்கு இடையே நடக்கும் சண்டையை கண்முன் நிறுத்தி இருக்கிறார்.

நாயகனின் மனைவி, மகளை அலைபேசியிலேயே ‘நடிக்க’ வைத்து இருப்பது, முதலாளி மனநிலையை ஒரே காட்சியில் அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பது, குடி நோயாளியிடமே ‘ஆட்டையைப்போடும்’ சக குடி நோயாளி (பக்ஸ்), குடி நோயாளி என்றால் புறந்தள்ள வேண்டியதில்லை, அவனுக்கும் மனசு, பாசம் உண்டு என்பதை பல காட்சிகளில் நேர்த்தியாக சொல்லி இருப்பது, மதுவுக்கு எதிரான மனநிலையை கருத்தாக இல்லாமல் – கதையாக சொல்லி மனதில் பதிய வைப்பது, படம் முழுதும் மது அருந்தும் காட்சி இருந்தும் அப்படி நமக்கு உந்துதல் ஏற்படுத்தாத காட்சி அமைப்பு என அறிமுக இயக்குநர் என்.அரவிந்தன் பிரமிப்பூட்டுகிறார்.

ஒருவனது வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுதிய ஓர் இரவின் கதை இது.

நம்மில் பலருக்கும்கூட மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும்.