ஆழி – திரைவிமர்சனம்

cinema news movie review

        ஆழி – திரைவிமர்சனம்

 

நாகர்கோவிலை தளமாகக் கொண்ட கதையில், வெளிப்படையாக ஒரு சாதாரண படகு மெக்கானிக்காக வாழும் ஒருவர்  ஆனால் மறைமுகமாக கடத்தல் உலகின் பேரரசராக விளங்குபவர் சரத்குமார். அவருக்கு உலகமே ஒரே மகள். சொத்துக்கும் ஒரே வாரிசு என்பதைக் கடந்த பாசம் கொண்ட தந்தை.

அந்த மகள் கல்லூரியில் படிக்கும் சக மாணவனை காதலிக்கிறாள். இளைஞன் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் குடும்பத்தைச் சேர்ந்தவன். பெட்ரோல் பங்கில் பகுதி நேர வேலை செய்து படிப்பை தொடரும் நேர்மையான மாணவன். இந்த காதல் விஷயம் சரத்குமாரின் காதில் விழும் தருணமே கதையின் திருப்புமுனை.

காதலை ஏற்க முடியாத ஆத்திரத்தில், இளைஞனை கடத்தி நடுக்கடலில் கொண்டு சென்று கொலை செய்ய முயற்சிக்கிறார் சரத்குமார். ஆனால் எதிர்பாராத விபத்து அந்த படகிலேயே நிகழ்கிறது. கொலை செய்ய நினைத்த மனிதருக்கே உயிர் ஆபத்து. அதோடு சரத்குமாரின் காவல் நாயும் கதையின் முக்கிய அங்கமாகிறது.

இந்நிலையிலிருந்து நாயகன் எப்படி தப்பிக்கிறார்? உயிருக்கு போராடும் சரத்குமாருக்கு அவர் உதவுகிறாரா? பழி, பாசம், மனிதநேயம் ஆகியவற்றின் மோதலாக மாறும் இந்தக் கதையின் மீதிப் பகுதி தான் ஆழியின் மையம்.

ஒரு சாதாரண காதல் கதையை நடுக்கடல் பின்னணியில் வைத்து பரபரப்பான திரைக்கதையாக மாற்றியிருப்பது இயக்குனரின் மிகப்பெரிய சாதனை. கடலில் நடக்கும் ஒவ்வொரு காட்சியும் திகில் கலந்த நெருக்கடியை உருவாக்குகிறது. தேவையற்ற காட்சிகள் எதுவும் இல்லாமல், சலிப்பு வராத வகையில் கதை நகர்த்தப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

படத்தின் அடுத்த மிகப்பெரிய பலம் அதன் தொழில்நுட்ப அணியினர்.இசையமைப்பாளர் வழங்கிய பாடல்களும் பின்னணி இசையும் காட்சிகளின் உணர்ச்சியை பலமடங்கு உயர்த்துகின்றன.ஒளிப்பதிவு கடலின் அகன்ற தன்மையையும் அதின் அபாய உணர்வையும் சிறப்பாகப் பதிவு செய்கிறது. ஒலி வடிவமைப்பில் அளித்த பங்களிப்பு படத்திற்கு சர்வதேசத் தரத்தை கூட்டுகிறது. குறிப்பாக கடலலைகள், காற்றின் சத்தம், படகின் இயந்திர ஓசை ஆகியவை நேரடியாக அந்த இடத்தில் இருப்பதுபோன்ற உணர்வை தருகின்றன.

தமிழ் சினிமாவில் கடலை மையமாகக் கொண்டு பல படங்கள் வந்திருந்தாலும், முழுக்க நடுக்கடலில் பரபரப்பாக நகரும் கதை அமைப்பில் ஆழி தனித்துவம் பெறுகிறது. ஒவ்வொரு காட்சியும் கடலின் மத்தியில் இயல்பாக படமாக்கப்பட்டிருப்பது தொழில்நுட்ப ரீதியாக பெரிய சாதனை.

ஆழி ஒரு சாதாரண காதல் கதையாக தொடங்கி, மனிதநேயம், உயிர்ப்போர், மன மாற்றம் ஆகியவற்றை பேசும் படம்.