ஆரோமலே திரைவிமர்சனம்
சமீப காலமாக தமிழ் சினிமாவில் கதைக்கே உயிர் கொடுக்கும் பல தரமான படங்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு வாரமும் ஒரு சிறந்த படைப்பை தமிழ் திரையுலகம் ரசிகர்களுக்கு பரிசாக அளித்து வருகிறது. அந்த வரிசையில், கடந்த வாரம் “ஆண்கள் பாவம் பொல்லாதது” நகைச்சுவையுடன் கூடிய அருமையான கருத்தைச் சொன்ன படமாக இருந்தது. இந்த வாரம் அதே தரத்தில் மனதை வருடும் காதல் கவிதையை “ஆரோமலே” என்ற தலைப்பில் இயக்குநர் சரங் தியாகு நம்மைச் சந்தித்துள்ளார்.
பெண்களைப் பார்த்தவுடன் காதலில் விழும் கிஷன் தாஸ், எப்போதும் தோல்வியையே சந்தித்து வருகிறான். ஒரு காதலியின் கல்யாணத்தை நிறுத்த முயற்சிக்கும் போது ஏற்பட்ட சிறிய சலசலப்பால் தாயின் கோபத்தையும் கண்டனத்தையும் எதிர்கொள்கிறான். மனமுடைந்த அவர், தந்தையின் அறிவுரையின்படி ஒரு மேட்ரிமோனி நிறுவனத்தில் வேலை சேர்கிறார். அங்கேயே நாயகி சிவாத்மிகா ராஜசேகரை சந்திக்கிறார்.
முதல் பார்வையிலேயே கிஷனுக்கு காதல், ஆனால் அவளுக்குக் காதல் என்றாலே வெறுப்பு! இதனால் இருவருக்குமிடையே தொழில் போட்டி ஆரம்பமாகிறது. அந்த போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதே திரைக்கதையின் மையம். அந்த கதை சொல்லல் உணர்ச்சியுடனும் நகைச்சுவையுடனும் ரசிகர்களை கவரும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது.

கிஷன் தாஸ் தனது முந்தைய தோல்விகளை தாண்டி இந்த படத்தில் அசத்தும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மூன்று வெவ்வேறு தோற்றங்களில் அவரை காணலாம் – ஒவ்வொன்றிலும் ரசிகர்களை கவரும் திறனுடன் நடித்திருக்கிறார். இந்தக் கதாபாத்திரம் அவருக்கே பொருத்தமானது என்பதை இயக்குநர் சரியாக உணர்ந்து உருவாக்கியிருப்பது தெளிவாக தெரிகிறது.
சிவாத்மிகா ராஜசேகர் – இந்த படத்தின் இதயத் துடிப்பு. சில முன்னைய படங்களில் நடித்திருந்தாலும், “ஆரோமலே” தான் அவரை ஒரு திறமையான நடிகையாக நிலைநிறுத்தும் படைப்பு. உணர்ச்சி மிக்க காட்சிகளில் அவர் கொடுத்த வெளிப்பாடு பாராட்டத்தக்கது. அப்பா ராஜசேகரும் அம்மா ஜீவிதாவும் போலவே, இவர் தனது நடிப்பால் புதிய உயரத்தை அடைந்திருக்கிறார்.
ஹர்ஷத் கான் – படத்தின் மறைமுக பலம். நகைச்சுவையிலும், குணச்சித்திரங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அதனுடன், மேகா ஆகாஷ், VTV கணேஷ், துலசி, சந்தானபாரதி, சிபி ஜெயகுமார், நம்ரிதா MV, சந்தியா வின்ஃப்ரெட் உள்ளிட்ட அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களைச் சிறப்பாக நியாயப்படுத்தியுள்ளனர்
இயக்குநர் சரங் தியாகு தனது முதல் படத்திலேயே தன்னுடைய திறமையை பளிச்சென காட்டியுள்ளார். உணர்ச்சி, நகைச்சுவை, காதல் ஆகியவற்றை சமநிலையுடன் இணைத்து, காட்சித் தொகுப்பு முதல் திரைக்கதை வரை ஒரு தரமான படைப்பை உருவாக்கியுள்ளார். தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய திறமை பிறந்திருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.
இசையமைப்பாளர் சித்து குமார், பாடல்களிலும் பின்னணியிசையிலும் அசத்தி, படத்தின் உணர்ச்சிகளை அழகாக உயர்த்தியுள்ளார். ஒளிப்பதிவாளர் கௌதம் ராஜேந்திரன், ஒவ்வொரு ஃபிரேமிலும் காதலின் மென்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

“ஆரோமலே” – மயிலிறகால் மனதை வருடும் ஒரு உணர்ச்சிப் பூர்வமான காதல் கதை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் ஒரு நெஞ்சை வருடும் காதல் கவிதை பிறந்திருக்கிறது.
உணர்ச்சியும் நகைச்சுவையும் கலந்த தரமான காதல் திரைப்படங்களை விரும்பும் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது.

