போலீஸ் ஃபேமிலி – திரைவிமர்சனம்

cinema news movie review

போலீஸ் ஃபேமிலி – திரைவிமர்சனம்

நடிகர்கள் :சரவணன்,ராஜா மலைச்சாமி, காதல் சுகுமார்,

இசை :ஜெயா கே தாஸ்,

ஒளிப்பதிவு :ஜெயகுமார் தங்கவேல்,

இயக்கம் :பாலு,

ஒரு பெரிய ரவுடியின் குடும்பத்தில் உள்ள மகன் பாசமும் அந்த மகனுக்கு நடந்த அநீதி போலீசாரால் ஏற்பட்டிருக்கும் இவர்களுக்கு இடையே நடக்கும் யுத்தம் தான் போலீஸ் ஃபேமிலி.

ஒருகாலத்தில் பெரிய ரவுடியாக இருக்கும் சரவணன் தனது மகனுக்கா தன் ரவுடித்தனத்தை  விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கையை வாழ்த்து வருகிறார். ஆனால் விதி விடவில்லை ஒரு நாள் கஞ்சா கடத்தல் வழக்கில் அவரது மகனை போலீசார் கைது செய்கிறார்கள். விசாரணை என்ற பெயரில் போலீஸ் நிலையத்தில் கடுமையாக சித்ரவதை செய்யப்படும் அந்த இளைஞன் உயிருக்கு போராடும் நிலையில் காட்டுக்குள் தூக்கி எறியப்படுகிறார். மறுநாள் அவர் உயிரிழந்த நிலையில் கிடைக்கிறார். இறந்தவர் சரவணனின் மகன் என்பதை அறிந்ததும், அந்த போலீஸ் நிலையமே பதட்டத்தில் ஆழ்கிறது. மகனின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து பழிவாங்கும் தீர்மானத்தில் சரவணன் இறங்குகிறார். இறுதியில் உண்மையான குற்றவாளி யார்? சரவணனின் கோபத்திலிருந்து போலீஸ் குழு தப்பிக்கிறதா? என்பதே படத்தின் மையக் கேள்வி.

இந்தப் படத்தை தயாரித்துள்ள ராஜா மலைச்சாமி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டராகவும், இரண்டு மகள்களின் தந்தையாகவும் வரும் அவரது கதாபாத்திரம் கதையின் முக்கியமான திருப்பங்களை உருவாக்குகிறது. கைது செய்யப்பட்ட இளைஞனை லாக்கப்பில் வைத்து சித்ரவதை செய்யும் போலீஸ் குழுவை அவர் வழிநடத்துகிறார். பின்னர் சரவணனின் கோபத்திலிருந்து தன்னையும் தனது குழுவையும், குடும்பத்தையும் காப்பாற்ற போராடும் அவரது முயற்சி கதைக்கு பரபரப்பை கூட்டுகிறது. நடிப்பில் சில இடங்களில் மேலும் நுட்பம் தேவைப்படுவது உணரப்பட்டாலும், முயற்சி தெரிகிறது.

காதல் சுகுமார், ஒரு சிறிய தவறால் பெரிய விளைவுகளை சந்திக்கும் காவலராக கவனம் ஈர்க்கிறார். ரவுடி சரவணனாக வரும் நடிகர் தனது வழக்கமான ஆக்கிரமித்த நடிப்பை வழங்கியுள்ளார். நாயகிகளாக நடித்துள்ள நிஷா தூபே மற்றும் சுரேகா ஆகியோரின் நடிப்பு கதைக்குத் தேவையான அளவில் அமைந்துள்ளது. ரோஜன் லியோன், எம். எஸ். செல்வா உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்களுக்கான பங்களிப்பைச் செய்துள்ளனர்.

ஜெயகுமார் தங்கவேலின் ஒளிப்பதிவு, குறைந்த பட்ஜெட்டில் கூட காட்சிகளை சீராக பதிவு செய்ய முயற்சித்திருப்பதை காட்டுகிறது. ஜெயா கே தாஸ் அமைத்துள்ள பாடல்களும் பின்னணி இசையும் கதையின் சூழலை தாங்கும் வகையில் இருக்கின்றன.

எழுதி இயக்கியுள்ள பாலு, போலீஸ் மற்றும் ரவுடி இடையேயான ஈகோ மோதலை மையமாக வைத்து ஒரு கிரைம் திரில்லரை உருவாக்க முயற்சித்துள்ளார். பட்ஜெட் குறைபாடுகள் சில இடங்களில் தெரிந்தாலும், திரைக்கதையில் சஸ்பென்ஸையும் வேகத்தையும் உருவாக்கும் முயற்சி காணப்படுகிறது. இன்னும் கொஞ்சம் காட்சிப்படுத்தலில் தீவிரம் இருந்திருந்தால் படம் மேலும் வலுவாக அமைந்திருக்கும்.

மொத்தத்தில், “போலீஸ் ஃபேமிலி பாச போராட்டம்.