வடம் – திரை விமர்சனம்
நடிப்பு: விமல், நட்ராஜ் (நட்டி), சனஷ்கா ஸ்ரீ, முனீஷ்காந்த், நரேன், இந்துமதி, பாலசரவணன், மதுசூதன் ராவ், தீபா சங்கர்.
இசை: டி. இமான்,
இயக்கம்: கெந்தீரன்.வி,
தயாரிப்பு: மசானி பிக்சர்ஸ் ராஜசேகர்.ஆர்.

ஒரு கொலை வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளியே வரும் விமலை நீதிமன்ற வளாகத்திலேயே தாக்க முயலும் எதிரிகள், வீட்டுக்குள்ளே கூட அவரை கொல்லத் திட்டமிடும் மனிதர்கள் என பல திசைகளில் இருந்து பகைமைகள் எழுகிறது. ஏன் அவரை கொலை செய்ய திசைக்கு திசை ஏன் திட்டமிடுகிறார்கள் அவர் என்ன செய்தார் இவர்களிடமிருந்து அவரை மீண்டாரா எப்படி அதை சமாளித்தார் என்பதுதான் மீதி கதை.
முறுக்கு மீசையுடன் கிராமத்து அதிரடி நாயகன் வேடத்துக்கு பொருத்தமாக இருக்கிறார் விமல். அவருடைய அப்பா ஊரில் பெரிய மனிதர். அவர் யாருக்கு நல்லது செய்தாலும். சில பேருக்கு பிடிக்காது. மஞ்சு விரட்டில் அவர் வளர்க்கும் காளை தொடர்ந்து ஜெயிக்க ஒருவர் பகையாளியாகிறார். அந்த பகையில் அவரை சிறை வரை கொண்டு போகிறது.
அத்தனை விஷயங்கள் அவரை சுற்றிச் சுழல காளை மீது காட்டும் நேசம், காளைக்கு பயிற்சி கொடுப்பவராக காட்டும் கம்பீரமான உடல்மொழி, எதிரிகளை அடித்து துவைத்து துவம்சம் செய்வதில் அட்டகாசமான ஹீரோயிஸம் என சுறுசுறுப்பான நடித்திருக்கிறார்.
துவக்கத்தில் விமலை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டு பின் தொடர்கிற சங்கீதா கல்யாணை பார்க்கும்போது, அவருக்கு கொடுத்திருப்பது ஹீரோவை துரத்தித் துரத்திக் காதலிக்கும் வழக்கமான வேலைதான் போலிருக்கிறது என்ற முடிவுக்கு வருகிறோம். ஆனால், அப்படியில்லை அதைவிட வேறு கடமைகள் இருக்கிறது என்று வேறொரு விதமான பரிமாணம் காட்டியிருக்கிறார். ரொமான்ஸுக்கும் வாய்ப்பிருக்கிறது. சின்னச்சின்ன கியூட்டான முகபாவங்கள் இயல்பிலேயே இருக்கும் அவரது அழகை தூக்கலாக்குகிறது.
தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவராக, விமலின் அப்பாவாக ஆடுகளம் நரேன்,
மஞ்சு விரட்டு போட்டியில் தன் காளையை எந்த காளையும் ஜெயித்துவிடக் கூடாது என்பதை லட்சியமாக கொண்டிருப்பவராக, அப்படி எதிர்த்து களம் கண்ட காளையை அடக்கியொடுக்க திட்டமிடுபவராக நட்டி நட்ராஜ்,
விமலின் நண்பனாக பாலசரவணன்,காமெடிக்காக இணைத்திருக்கிறார்கள் என்று நினைத்தால், உம்ஹூம் நான் வந்தது பெரிய சம்பவம் பண்றதுக்காக என்று கத்தியும் ரத்தமுமாக மிரட்டும் முனீஸ்காந்த் என திரும்பிய பக்கமெல்லாம் ஏகப்பட்ட நடிகர் நடிகைகள்… அத்தனைப் பேரும் கேரக்டர்களாகவே மாறியிருக்கிறார்கள் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
காளைகள் ஆரம்பத்தில் கொஞ்ச நேரமும் கடைசியில் கொஞ்ச நேரமும் களத்தில் சீறிப் பாய, ஹீரோ ஏழெட்டுக் காட்சிகளில் சீறிப் பாய்கிறார். ஹீரோயின் இன்டர்வலுக்கு முன் சீறுகிறார். மிச்சமிருக்கிறவர்களும் சீற்றம் காட்டுவதற்கு வாய்ப்புகள் அதிகமிருக்கிறது. கிண்டலும் கேலியுமாக திரிகிற குட்டிபுலி சரவண சக்திகூட ஒரு காட்சியில் செருப்பைப் பறக்கவிடுகிறார். அதற்கேற்றபடி பின்னணி இசையில் கேப் விடாமல் அதிரடி அட்டகாசம் செய்திருக்கிறார் டி இமான்.
ஞானகரவேல் வரிகளில் உருவான ‘பாண்டிமுனி வர்றான்’ பாடலில் உற்சாகம் தெறிக்கிறது. ‘ஆசைக் களவாணியே என்ன சொக்க வெச்ச’ பாடலின் சின்மயி குரலில் சொக்கிப் போகாமல் தப்பிக்க முடியாது. இன்னும் சில பாடல்களும் அசத்தலான இசையில் அணிவகுக்கின்றன.
கிராமம், கோயில் திருவிழா, ஆளாளுக்கு நான்தான் வீரன் என காட்டும் கெத்து, பகை பழிவாங்கல் என அறிவைத் தொலைத்தவர்கள் அறிவாளைத் துக்கித் திரிவதால் நேரும் உயிரிழப்புகள் என பார்த்துப் பழகிய காட்சிகளின் தொகுப்பாக இருந்தாலும்,
எகிறிப் பாய்ந்து குடலை உருவும் ஜல்லிக்கட்டு போட்டிகளையே பார்த்துப் பழகியவர்களுக்கு, காளைகள் வடத்தில் கட்டப்பட்ட நிலையில் வீரம் கொப்பளிக்கும் ‘வட மஞ்சு விரட்டு’ என்கிற பாரம்பரிய விளையாட்டை காண்பித்திருப்பது படத்தின் தனித்துவம்.
வடம் – ஜல்லிக்கட்டு காளை நேசம்.

