full screen background image
Search
Friday 10 May 2024
  • :
  • :
Latest Update

2018-19ம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு அட்டவணை

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்த கல்வியாண்டில் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார். அதன்படி, 10-ம் வகுப்புக்கு மார்ச் 14 முதல் 29 வரையில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்றும், 11-ம் வகுப்புகளுக்கு மார்ச் 6 முதல் 22 வரையிலும், 12-ம் வகுப்புகளுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வுக்கு பதிவு செய்யும் முறையை ஆன்லைனில் கொண்டு வருவதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழக மாணவர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதுவதை தவிர்க்க, தமிழகத்திலேயே அதிகப்படியான மையங்களை அமைக்க தயார் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில், தமிழகத்தில் 500 மையங்கள் கேட்டாலும் கொடுக்க தயார் எனவும், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மொழிப்பாடங்களில் சிறப்பாக கற்க ஆசிரியர்கள் உதவுவார்கள் என்றும், அதற்கு பெரிதும் உதவியாக ஸ்மார்ட் வகுப்பு திட்டம் இருக்கும் எனவும் கூறினார். 11-ம் வகுப்புகளுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தில் 40 சதவிகிதம் பாடங்கள் நீட் குறித்ததாக இருக்கும் எனவும் அறிவித்தார்.

மேலும், நீட் தேர்வில் குறைந்தது 250 மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும், மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், வெகு சில ஆசிரியர்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், பல ஆசிரியர்கள் பணியில் இருப்பதால் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.