full screen background image
Search
Monday 13 May 2024
  • :
  • :
Latest Update

கர்நாடகாவில் பாஜக ஆட்சி

கர்நாடக மாநிலத்தில் கடந்த 12-ம்தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவான நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தொடக்கத்தில் காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. இரு கட்சிகளும் மாறிமாறி முன்னிலை பெற்றன. 9 மணிக்குப் பிறகு நிலைமை மாறியது. ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில், பா.ஜ.க அந்த மேஜிக் எண்ணை நெருங்கியது. 11.30 மணி நிலவரப்படி பா.ஜ.க. 114 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இதன்மூலம் பா.ஜ.க. அதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது. கர்நாடகா முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க உள்ளார்.

தேர்தல் அன்றே செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். 17-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்றும், விழாவிற்கு பிரதமர் மோடியை அழைப்பதற்காக 15ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாகவும் கூறினார்.

அவர் கூறியபடி இன்று தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு சாதகமாக உள்ளதால் எடியூரப்பா மிகுந்த உற்சாகத்தில் உள்ளார். தனது இல்லத்தில் வழிபாடு நடத்திய அவர், நிருபர்களிடம் கூறும்போது, 17-ம் தேதி பதவியேற்பு விழா நடக்கும் என்று தகவல் தெரிவித்து உள்ளார். பதவியேற்பு விழாவுக்காக கன்டீராவா ஸ்டேடியத்தை முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.