full screen background image
Search
Wednesday 8 May 2024
  • :
  • :
Latest Update

தானா சேர்ந்த கூட்டம் – விமர்சனம்

மின்சார வாரிய உதவி பொறியாளர் வேலைக்கு 12 லட்சம்.. தொழிற்நுட்ப உதவியாளர் வேலைக்கு 6 லட்சம். நல்ல லாபம் (?) வரும் போலிஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் போஸ்டிங் என்றால் ஒரு கோடி ரூபாய்..
இப்படித்தான் இன்றைக்கு அரசாங்க உத்தியோகத்திற்கான நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

சாதாரண ஆயம்மா வேலையிலிருந்து தீர்ப்பு வழங்குகிற நீதிபதி வேலை வரைக்கும் “தகுதி” என்பது இப்போதெல்லாம் அப்பட்டமாக பணமென்றாகி விட்டது. புஸ்ஸில் ஏறியதும் டிக்கெட் வாங்குவது போல்,
ஒரு விஆஒ-விடம் கையெழுத்து வாங்கும் போது நாமாகவே முன்வந்து காசுதர பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம். இப்படித்தான் எல்லா அரசு அலுவலகங்களிலும் காசு தருவது என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

இவ்வளவும் எங்கிருந்து ஆரம்பித்தது? இந்த நாடு ஆரம்பத்திலிருந்தே இப்படித் தான் இருந்ததா?, இல்லையே!. லஞ்சமும், ஊழலும் இடயில் முளைத்த ஒன்று தானே. மிகச் சரியாக படத்தை அந்தப் புள்ளியில் இருந்தே ஆரம்பித்திருக்கிறார்கள்.

எதையுமே வலிய திணிக்காமல் ரொம்ப ஜாலியாக போவதால் “தானா சேர்ந்த கூட்டம்” நிச்சயமாக எல்லோருக்கும் பிடித்தமான ஒரு படமாக கண்டிப்பாய் இருக்கும்.

படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒரு ரீமேக் செய்கிறோம் எளிதான வேலை என்று அப்படியே காப்பியடித்து வைக்காமல் தனது ஸ்டைல் இதுதான் என்பதை அழுத்தமாக முத்திரை வைக்கிறார்.
விக்னேஷ் சிவனின் பலமே, அவர் அலட்டிக் கொள்ளாமல் எழுதும் வசங்கள் தான். சின்ன சின்ன வசனங்கள் கூட நம்மை அப்படி மகிழ்விக்கின்றன. சின்னச் சின்னக் காட்சிகளைக் கூட ரசிக்கும்படியாக
பதிவு செய்கிற அவரது நேர்த்தி, “நானும் ரவுடி தான்” படத்தைப் போலவே இட்க்ஹிலும் வொர்க்-அவுட் ஆகியிருக்கிறது.

அனிருத், நிச்சயமாய் இளைஞர்களின் ரசனையறிந்த ஒரு இசையமைப்பாளராய் வளர்ந்திருக்கிறார். பாடல்களைத் தாண்டி, பின்னணி இசையிலும் பிரித்தெடுத்திருக்கிறார். சூப்பர் ப்ரோ!

கார்த்திக், சுரேஷ் மேனன், ரம்யா கிருஷ்ணன், நந்தா, சத்யன், கலையரசன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, செந்தில், சிவசங்கர் மாஸ்டர் என தானா சேர்ந்த கூட்டத்தில் ஒரு பெருங்கூட்டமே நடித்திருக்கிறது.
எல்லோருமே அவரவர் பாத்திரங்களுக்காக போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். இருந்தாலும் ரம்யா கிருஷ்ணன் அடித்து நொறுக்குகிறார். சுரேஷ் மேனனுக்கு, இயக்குநர் கவுதம் பின்னணி பேசியிருக்கிறார், அவ்வளவு பொருத்தமாய் இருக்கிறது.

அழகு, குறும்பு, ஆக்ரோஷம், கோபம், சோகம் என அத்தனையையும் சூர்யா பிரதிபலித்து வெகு நாட்களாகிவிட்டது. இந்தப் படத்தின் மூலம் அத்தனை குறைகளையும் நிவர்த்தி செய்திருக்கிறார் சூர்யா. நிறைய
நட்சத்திரங்கள் இருந்தாலும், அத்தனை பேருக்கும் சம அளவு வாய்ப்பு தந்து அடக்கி வாசித்திருப்பது கூடுதல் ப்ளஸ்.

கீர்த்தி சுரேஷ், அழகாய் இருக்கிறார். அவ்வளவுதான்.

படத்தில் நிறைய நம்ப முடியாத காட்சிகள், இருந்தாலும் பொறுத்துக் கொண்டு ஜாலியாக ரசித்துவிட்டு வரலாம்.