அறம் இரண்டாம் பாகத்தில் இவரா?

News

பல வருட காத்திருப்பையும், பல வருட உழைப்பையும் ஒரே படத்தில் கொட்டி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர் இயக்குநர் கோபி நயினார்.

“அறம்” போல வலுவான, நேரடியான அரசியல் பேசும் படம் இனி தமிழ் சினிமாவில் வருமா? என்பது கேள்விக்குறி. ஏன், கோபியாலேயே அது சாத்தியாமா? என்பதும் சந்தேகமே.
அப்படியொரு கதைக்களத்தை மையமாக வைத்து கதை சொன்ன கோபி நயினார், அடுத்த படத்தில் சித்தார்த்தை இயக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

நயன்தாரா நடிப்பில் வெளிவந்திருந்த “அறம்” படத்திற்கு கிடைத்த வரவேற்பை வைத்து, அந்தப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கோபி அந்த முடிவை தற்போதைக்கு தள்ளி வைத்திருப்பதாகத் தெரிகிறது.

இந்நிலையில் தான், கோபி நயினார் அடுத்ததாக சித்தார்த்தை இயக்க இருப்பதாக கூறப்படும் இந்த அறிவிப்பு கசிந்திருக்கிறது.

இதுகுறித்து இயக்குநர் கோபியிடம் கேட்ட போது,
“அடுத்த படம் குறித்து சித்தார்த்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், உறுதியான பின்னர் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்” என்றும் கூறினார்.

சித்தார்த் நடிக்க இருப்பது `அறம்’ படத்தின் இரண்டாவது பாகமா? என்ற கேள்விக்கு, “இது முற்றிலும் மாறுபட்ட கதை” என்றார்.

இந்தப் படம் முடிந்த பிறகு, நயன்தாராவை வைத்து, “அறம்” படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவேன் என்று கோபி கூறியிருக்கிறார்.

சித்தார்த் தற்போது கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கத்தில் `சைத்தான் கா பச்சா’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
இதுதவிர `கம்மார சம்பவம்’ என்ற மலையாள படமொன்றிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.