full screen background image
Search
Monday 13 May 2024
  • :
  • :
Latest Update

புரட்சித் தளபதிக்கு சோதனை மேல் சோதனை!

சோதனைக்கு மேல் சோதனையை சந்தித்து வருகிறார் நடிகர் விஷால். வருமான வரித்துறை ரெய்டு, ஆர்.கே.நகர் வேட்புமனு நிரகரிப்பு என அடுத்தடுத்து சரிவுகளை சந்தித்து வரும் விஷாலுக்கு, அவர் பொறுப்பு வகிக்கிற நடிகர் சங்கம் மற்றும் தய்யரிப்பாளர் சங்கத்திலிருந்தே இப்போது ஏகப்பட்ட குடைச்சல் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஆர்.கே.நகர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தபோதே, விஷாலுக்கு எதிராக சேரன் களமிறங்கினார். சில தயாரிப்பாளர்களோடு இணைந்து சங்க கட்டிடத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கு டி.ராஜேந்தர், ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனைடையில் தயாரிப்பாளர் சங்கப் பொறுப்பிலிருந்து “ஸ்டுடியோ க்ரீன்” ஞானவேல்ராஜா விலகினார். அதற்கான காரணம் வேறாக கூறப்பட்டாலும், அது விஷாலுக்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.

சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுவில் விஷாலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சேரன் தரப்பு முடிவு செய்தது. இதில் ஏற்பட்ட சச்சரவினால், பொதுக்குழுவிலிருந்து பாதியிலேயே விஷால் வெளியேறினார்.

இந்நிலையில், இப்போது நடிகர் பொன்வண்ணன் நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். விஷாலின் செயல்பாடுகளின் மீது முரண்பாடு உள்ளதால் இந்தப் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து நடிகர் பொன்வண்ணன் கூறியிருப்பதாவது,

“சங்கத்தில் பதவி ஏற்கும் போது பல கட்சியை சார்ந்தவர்கள் சங்கத்தில் இருப்பதால், நாம் எந்த கட்சியையும் சார்ந்து இருக்க கூடாது என்று முடிவெடுத்தோம். ஆனால், விஷால் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்தது அவருடைய தனிப்பட்ட முடிவாக இருந்தாலும் சங்கத்தின் பொறுப்பில் இருந்துக்கொண்டு எங்களால் பதில் கூற இயலவில்லை. எனவே இந்த பதவியிலிருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

ஞானவேல் ராஜா மற்றும் பொன்வண்ணனின் அடுத்தடுத்த ராஜினாமா சம்பவங்கள் விஷாலுக்கு மேலும் மேலும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.